குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை: பாகிஸ்தானை எச்சரிக்க இந்தியா வலியுறுத்தல்

குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணையில் பாகிஸ்தான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக கண்டனம் தெரிவித்துள்ள
குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை: பாகிஸ்தானை எச்சரிக்க இந்தியா வலியுறுத்தல்


குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணையில் பாகிஸ்தான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, மீண்டும் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்க அந்நாட்டை எச்சரிக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கவார் குரேஷி, 2-ஆம் நாள் விசாரணையின்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக இந்திய தரப்பு வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே நீதிபதிகள் அமர்விடம் முறையிட்டார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் தரப்பு வாதத்தில், வெட்கக்கேடு, முட்டாள்தனம், அவமானம், அராஜகம் போன்ற கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச நீதிமன்றத்தில் தனக்கெதிராக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. இந்த வார்த்தைகளை நானும் பயன்படுத்த இந்திய கலாசாரம் தடுக்கிறது.
எனவே, கடுமையான வார்த்தைகளை பாகிஸ்தான் வழக்குரைஞர் பயன்படுத்தாமல் இருக்க நீதிமன்றம் எச்சரிக்க வேண்டும். இறையாண்மையுடைய ஒரு நாட்டுக்கு எதிரான வழக்கு விசாரணையில், மற்றொரு நாடு பயன்படுத்தும் வார்த்தைகளானது கண்ணியத்துடன் இருக்க வேண்டும்.
சட்டத்தில் வல்லுநராக இருப்பவர்கள் சட்டத்தை பயன்படுத்துவார்கள். உண்மையை அடிப்படையாகக் கொண்டவர்கள் உண்மையை பயன்படுத்துவார்கள். எதிலுமே பலத்துடன் இல்லாதவர்கள், வெற்று வார்த்தைகளையே பயன்படுத்துவார்கள். பாகிஸ்தான் அவ்வாறு வெற்று வார்த்தைகளை பயன்படுத்துகிறது. மாறாக, இந்தியா உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்கிறது என்று இந்திய வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கூறினார்.
இந்த வழக்கில் இந்தியா தனது இறுதி வாதங்களை முன்வைப்பதற்கான 90 நிமிட அவகாசம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அதேபோல், பாகிஸ்தான் தனது இறுதி வாதங்களை முன்வைக்க அந்த நாட்டுக்கு வியாழக்கிழமை 90 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. 
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், உளவு நடவடிக்கை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்த மனு மீதான 4 நாள் விசாரணை திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சர்வதேச நீதிமன்றமானது இந்த வழக்கின் தீர்ப்பை வரும் கோடைகாலத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com