சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிபொருள் பயன்பாடு: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

இயற்கை எரிபொருள்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுத்திகரித்து பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய வேண்டும் என்று துறைசார் நிபுணர்களை குடியரசுத் தலைவர்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிபொருள் பயன்பாடு: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்


இயற்கை எரிபொருள்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுத்திகரித்து பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய வேண்டும் என்று துறைசார் நிபுணர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். 
எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல்: சவால்களும்; வாய்ப்புகளும் என்ற தலைப்பிலான 3 நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி தில்லியில் புதன்கிழமை தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறைக்கான ஆராய்ச்சி கவுன்சில் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.
அதில் அவர் மேலும் பேசியதாவது:
எரிபொருள் மற்றும் சூற்றுச்சூழல் என்பது வளரும் நாடுகளுக்கு மட்டுமல்ல; வளர்ச்சியடைந்த நாடுகளுக்குமான முக்கியப் பிரச்சனையாகும். நிலக்கரி, எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை எரிபொருள்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுத்திகரித்தும், திறம்படவும் பயன்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகளை கண்டறிவது முக்கியமாகும். 
இதில் மரபுசார் எரிபொருள்களை உற்பத்தி செய்வோர், அதை நுகர்வு செய்வோர் என, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு, நிலக்கரியே பிரதான எரிபொருளாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பயன்பாடு அதிகரித்து வரும்போதிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பசுமை ரீதியில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது மேம்படுத்தப்பட வேண்டும். 
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து வரும் இந்தியா, கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குடிமக்கள் அனைவருக்கும் மலிவான விலையில் மின்சாரம் வழங்கவும், தொழில்துறைப் புரட்சியின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இந்த மாநாட்டில், மரபுசார் எரிபொருள் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், ஆற்றல் சேமிப்பு கருவிகள், நிலையான சுரங்கத் தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் விவகாரங்கள் உள்ளிட்ட தலைப்புகள் விவாதிக்கப்படும்.  எரிபொருள், சுற்றுச்சூழல் தொடர்பாக விவாதிப்பதற்கும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்த மாநாடு தகுந்த ஒரு இடமாக இருக்கும்.
இந்த மாநாட்டின் முடிவில், நமது உலகத்தை தொழிற்துறை ரீதியாக முன்னேற்றுவதற்கு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கு சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையிலாகவும் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று நம்புகிறேன் என்று ராம்நாத் கோவிந்த் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com