பாகிஸ்தானை புகழ்ந்த சவூதி அரேபிய இளவரசரை நேரில் வரவேற்பதா?: மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்பதா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ்


பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்பதா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முகமது பின் சல்மான், அந்நாட்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய நிதியுதவிகளை அறிவித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அமைதி பேச்சுவார்த்தை ஒன்றே சிறந்த வழி எனத் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியிருந்தார்.
இதனிடையே, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு சல்மான் செவ்வாய்க்கிழமை இரவு வந்தார். தில்லி விமான நிலையம் வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறி நேரில் சென்று வரவேற்றார். 
சவூதி அரேபியா நட்புக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அவர் இவ்வாறு செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேசிய நலன்கள், மோடியின் ஆரத்தழுவுதல் அணுகுமுறை ஆகியவை மரபுகளை மீறிவிட்டது. பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்த மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை புகழ்ந்தவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதான் புல்வாமா தாக்குதலில் பலியானோரை நினைவுகூறும் விதமா?
ஐ.நா. பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புத் தலைவர் மசூத் அஸாரை சேர்க்கும்படி இந்தியா வலியுறுத்துவது, அரசியலா? எனவே, ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பாகிஸ்தானுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டதை மறுக்கும்படி, சவூதி இளவரசரிடம் பிரதமர் மோடி துணிச்சலாக தெரிவிக்க வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா வெளியிட்டுள்ள பதிவுகளில், மரபுகளை மீறுவதிலும், சவூதி அரேபியா இளவரசரை வரவேற்பதிலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் மோடி போட்டுயிட்டுள்ளார் என்பது தெரிகிறது. இதற்கு எந்த அவசியமும் இல்லை அல்லது இதை நியாயப்படுத்தவும் முடியாது. அதேபோல், புல்வாமாவில் கொடூர தாக்குதல் நடந்த பிறகு, பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் சென்றுள்ளார். இந்நிலையில், கூட்டறிக்கையில் மசூத் அஸாருக்கு தடை விதிப்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவும் இல்லை. இது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்கமளிக்க வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com