முத்தலாக் அவசரச்சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரான ஆயுதம்: அகிலேஷ் யாதவ்

முத்தலாக் அவசரச்சட்டத்தை சிறுபான்மையினருக்கு எதிரான ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். 
முத்தலாக் அவசரச்சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரான ஆயுதம்: அகிலேஷ் யாதவ்


முத்தலாக் அவசரச்சட்டத்தை சிறுபான்மையினருக்கு எதிரான ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். 
முத்தலாக் அவசரச்சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்த நிலையில், அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
சமூக மாற்றம் என்பது கட்டாயப்படுத்தியோ, சட்டவிரோதச் செயல்களின் மூலமாகவோ ஏற்படுத்தப்படக் கூடாது. முத்தலாக் அவசரச்சட்டமானது, பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில், நீதிபதி சச்சார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் சட்டத்தையே நாங்கள் ஆதரிப்போம் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், முத்தலாக் அவசரச் சட்டமானது ஓராண்டில் 3-ஆவது முறையாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் அவசரச்சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. நடப்பு நாடாளுமன்றம் வரும் ஜூன் 3-ஆம் தேதியுடன் கலையும்போது, முத்தலாக் மசோதாவும் காலாவதியாகிவிடும். 
முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கும் இந்த மசோதாவின் விதியை சட்டரீதியாக ஏற்க இயலாது என்று எதிர்க்கட்சிகளும், சிறுபான்மையினத் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
ஆனால், அந்த விதி முஸ்லிம் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் அளிப்பதாக மத்திய அரசு வாதாடி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com