ரியல் எஸ்டேட், லாட்டரிக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு?: பிப்.24-இல் முடிவு

ரியல் எஸ்டேட், லாட்டரி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.


ரியல் எஸ்டேட், லாட்டரி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 33-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிதித் துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
மாநில நிதியமைச்சர்கள் இக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. அவர்கள், காணொலி வாயிலாக தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். 
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம், அருண் ஜேட்லி கூறியதாவது:
ரியல் எஸ்டேட் மீதான வரியைக் குறைப்பது குறித்து குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் தலைமையிலான அமைச்சர்கள் குழு விவாதித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாநில அமைச்சர்கள் பலரும், நேரில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க விருப்பம் தெரிவித்தனர். 
எனவே, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் மீதான வரியைக் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும். இதேபோல், லாட்டரி மீதான வரியைக் குறைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
மேலும், ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூட்டத்தில் சிலர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான ஜம்மு-காஷ்மீரில் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் வீடுகளுக்கு மிகை வரி இல்லாமல், ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு வலியுறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com