அயோத்தியில் சர்ச்சைக்குள்படாத பகுதிகளை மட்டுமே திருப்பியளிக்க மத்திய அரசு விரும்புகிறது: பாஜக

அயோத்தியில் சர்ச்சைக்குள்படாத நிலப் பகுதிகளை மட்டுமே அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பியளிக்க மத்திய அரசு விரும்புவதாக பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.


அயோத்தியில் சர்ச்சைக்குள்படாத நிலப் பகுதிகளை மட்டுமே அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பியளிக்க மத்திய அரசு விரும்புவதாக பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமர் கோயில் விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இந்த மாதம் 26-ஆம் தேதி விசாரிக்கவிருக்கிறது.
அயோத்தியில் மத்திய அரசு திருப்பி அளிக்க விரும்பும் நிலப்பகுதிகளுக்கும், அந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சர்ச்சைக்குரிய நிலப்பகுதிகள் அல்லாத, பிற நிலப் பகுதிகளை மட்டுமே உரிமையாளரிடம் திருப்பியளிக்க மத்திய அரசு விரும்புகிறது. அயோத்தி விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதையே மத்திய அரசு பின்பற்றும் என்றார் அவர்.
அயோத்தியில் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, அந்த மசூதி இருந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு கடந்த 1993-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய கட்டடம் அமைந்திருந்த இடம் உள்பட 2.77 ஏக்கர் நிலப்பகுதியை ராம் லல்லா அமைப்பு, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், சர்ச்சைக்குரிய 0.313 ஏக்கர் நிலத்தை தவிர்த்து, அரசால் கையகப்படுத்தப்பட்ட எஞ்சிய நிலப் பகுதிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பியளிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. மேலும், சர்ச்சைக்குள்படாத அயோத்தி நிலப் பகுதிகளை ராம ஜென்ம பூமி நியாஸ், ராம் லல்லா உள்ளிட்ட உரிமையாளர்களிடம் திருப்பி அளிப்பதில் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று அந்த மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில்,  பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com