பாகிஸ்தான் பயங்கரவாதிகளை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் அரசு மனு

ஜம்மு சிறையிலிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேரை திகார் சிறைக்கு மாற்றக் கோரி அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


ஜம்மு சிறையிலிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேரை திகார் சிறைக்கு மாற்றக் கோரி அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஜம்மு சிறையிலுள்ள 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை திகார் சிறைக்கு மாற்றக் கோரி ஜம்மு-காஷ்மீர் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 
அந்த மனுவில், பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் இணையவும், அரசுக்கு எதிராகச் செயல்படவும் அவர்கள் மூளைச்சலவை செய்து வருகின்றனர். எனவே, ஜம்மு சிறையில் இருக்கும் 7 பயங்கரவாதிகளை தில்லியிலுள்ள திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோயிப் ஆலம், உள்ளூரைச் சேர்ந்த கைதிகளுக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும். ஃபரூக் என்ற பயங்கரவாதியை ஜம்மு சிறையிலிருந்து இடமாற்றம் செய்யக்கோரி மாநில அரசு ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளது. ஒருவேளை அவர்கள் அனைவரையும் திகார் சிறைக்கு மாற்ற இயலாவிட்டால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த பஞ்சாப் அல்லது ஹரியாணா மாநில சிறைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், பயங்கரவாதிகளை இடமாற்றம் செய்வது குறித்தான அனைத்து மனுக்கள் மீதும் விரிவாக விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com