பாதுகாப்புத் துறை தோல்வியை மறைக்க மத்திய அரசு தந்திரம்: காங்கிரஸ்

பாதுகாப்புத் துறை தோல்விகளை மறைக்க, தேசியவாதத்தை தூண்டும் தந்திரத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.


பாதுகாப்புத் துறை தோல்விகளை மறைக்க, தேசியவாதத்தை தூண்டும் தந்திரத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
முன்னதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. ஆனால், கட்கரியின் கருத்தை முன்வைத்து, மத்திய பாஜக அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு எப்போதும் வெற்று பேச்சால் மட்டுமே தப்பித்து விட முயற்சிக்கிறது. கிழக்கில் பாயும் நதிகளின் உபரி நீரை பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுப்போம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அணையை கட்டி, நீரை தடுத்துவிட முடியுமா?
அமைச்சர் குறிப்பிட்ட ஷாபூர்கண்டி அணைத் திட்டத்துக்கு கடந்த 1999-ஆம் ஆண்டிலும், உஜ் அணை திட்டத்துக்கு 2006-ஆம் ஆண்டிலும் ஒப்புதல் வழங்கப்பட்டது. தேசியவாதத்தை தூண்டுவதன் மூலம் பாதுகாப்புத் துறை தோல்விகளை மறைக்க மத்திய அரசு முயல்கிறது. 
நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரேனும் கேள்வியெழுப்பினால், அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறது. அதனை காங்கிரஸ் அனுமதிக்காது என்றார் மணீஷ் திவாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com