14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பிஎஸ்எஃப் வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக கூடுதலாக அழைத்துவரப்பட்டுள்ள துணை ராணுவப் படையின் 100 குழுக்களில், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: 
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வழக்கமான தேர்தல் ஒத்திகை நடவடிக்கைக்காக துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 100 குழுவினர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 குழுவினர் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களாவர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு காஷ்மீர் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், அவர்கள் உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர்.
தற்போது இந்த எல்லை பாதுகாப்புப் படையினர், ஸ்ரீநகரில் 4 இடங்களிலும், பட்காம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் பணியிலிருந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர். 
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையாக அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை பாதுகாப்புப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படையினருடன் இணைந்து, காஷ்மீர் மண்டலத்தில் வழக்கமான பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
பாக். குழு அமைப்பு: புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், "இடர்பாட்டு மேலாண்மைக் குழு' என்ற பெயரிலான குழு ஒன்றை பாகிஸ்தான் அமைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அந்தக் குழு, எல்லைப் பகுதி சூழல், தூதரக ரீதியிலான தொடர்பு குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் அவ்வப்போது அளித்து வரும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com