புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி.

உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க உறுதி: பிரதமர் மோடி

உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற ஆங்கில பத்திரிகை ஒன்றின் கருத்தரங்கு நிகழ்ச்சியில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்பு ஆட்சியிலிருந்தபோது, அமைச்சகங்களுக்கு இடையேயும், அரசில் இருந்த தனிநபர்களுக்கு இடையேயும் போட்டி நிலவியது. 
ஊழல் புரிவதிலும், தாமதம் செய்வதிலும் போட்டி நிலவியது. யார் அதிகம் ஊழல் செய்வது, யார் மிக வேகமாக ஊழல் செய்வது, புதிய வழியில் யார் ஊழல் புரிவது ஆகியவற்றிலும் போட்டி நிலவியது. அதேபோல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, அலைக்கற்றை ஒதுக்கீடு, பாதுகாப்பு தளவாட ஒப்பந்தங்கள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் எதில் அதிகம் ஊழல் புரியலாம் என்பதிலும் போட்டி காணப்பட்டது. இந்த போட்டிகளையும், அந்த போட்டிகளில் யார் முக்கியப் புள்ளிகளாக செயல்பட்டனர் என்பது நமக்கு தெரியும்.
ஆனால், தற்போதைய பாஜக கூட்டணி அரசின் ஆட்சியில் மேற்கண்ட போட்டிகள் அனைத்தும் முடிவு கட்டப்பட்டு, ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதில், நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு கொடுப்பதில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலைகள் ஏற்படுத்துவதில், 100 சதவீத சுகாதார வசதி செய்து கொடுப்பதில், 100 சதவீத மின்சார வசதி செய்து கொடுப்பதில் போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வளர்ச்சித் தொடர்பான இலக்குகளை அடைவதில், மாநிலங்களுக்கும், பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
2014-19ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், நமது நாடு சராசரியாக 7.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சராசரி பணவீக்கமும் 4.5 சதவீதமாக இருந்தது. தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட பிறகு, தற்போதுதான்  நமது நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகமாகவும், பணவீக்கம் மிக குறைவாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் வளர்ச்சிக்கும், ஏழை மக்களுக்கும் சாதகமாக அரசால் இருக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் அதை நாட்டு மக்கள் தற்போது சாத்தியமாக்கியுள்ளனர்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு, நமது நாட்டில் கொள்கை முடக்கம் காணப்பட்டது. இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. 
ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சகிப்புத்தன்மை, தடைகள் ஆகியவை நம்பிக்கையாக மாற்றப்பட்டன. பிரச்னைகள் புதிய முயற்சிகளாக மாற்றப்பட்டன. இன்றைய மாற்றம் தெளிவாக தெரிகிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய மதிப்பு 2.5 லட்சம் கோடி டாலராகும். உலகளவில் இந்தியா 6ஆவது பொருளாதார சக்தியாக திகழ்கிறது.  இதை மாற்றி, இந்தியப் பொருளாதாரத்தை 10 லட்சம் கோடி டாலர் மதிப்புக் கொண்டதாகவும், உலகளவில் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவெடுக்க வைக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாகவும், புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் உலகை வழிநடத்தும் சக்தியாகவும் இந்தியா உருவாக வேண்டும் என்பது எங்களின்  விருப்பமாகும். பாதுகாப்பான எரிசக்தியை மக்களுக்கு அளிப்பது, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவது, மின்னணு வாகன சந்தையிலும், எரிசக்தியை சேமித்து வைக்கும் கருவிகள் ஆகியவற்றிலும் உலகின் தலைவராக இந்தியா திகழ்வது ஆகியவையும் எங்களது விருப்பமாகும். இவற்றை இலக்காக மனதில் கொண்டு, புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம்.
கடந்த 3 தொழிற்புரட்சிகளை இந்தியா தவிர விட்டுவிட்டது. இருப்பினும், 4ஆவது தொழிற்புரட்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. கடந்த காலங்களில் நடந்தவற்றை நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆனால், எதிர்காலத்தில் நடப்பவற்றை நம்மால் தீர்மானிக்க முடியும். ஆதலால்தான், நமது  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவில் பல காரியங்கள் சாத்தியப்படாது என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. 
அதாவது, இந்தியாவை தூய்மையாக்குவது, ஊழலில்லாத ஆட்சியை அளிப்பது, மக்களுக்கு சேவை செய்வதில் இருந்து ஊழலை நீக்குவது, இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்டவை சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளது. இதை நாட்டு மக்கள் சாத்தியமாக்கிவிட்டனர்.
"சாத்தியமில்லை என்பது தற்போது சாத்தியமாகியுள்ளது'. இதுதான் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பாஜகவின் தேர்தல் கோஷம் ஆகும் என்றார் மோடி.
இதனிடையே, பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் கும்பமேளா திருவிழா; அது உலகுக்கு உத்வேகமாக திகழ்கிறது. இதற்கு பாரபட்சமில்லாமல் நடுநிலையுடன் தேர்தல் நடைபெறுவதே காரணம். இதை காண, உலக மக்கள் வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com