சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில், பாஜக தலைமையிலான அரசு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில், பாஜக தலைமையிலான அரசு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சமாஜவாதி கட்சியின் இளைஞரணியினர் கடந்த 12-ஆம் தேதி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரயாக்ராஜ் செல்ல முயன்ற அகிலேஷுக்கு சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி மாநில அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து காவல் துறையினருக்கும் அக்கட்சியின் இளைஞரணியினருக்கும் 

இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பல இளைஞர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பாதுகாப்புப் படைவீரர் மகேஷ் குமாரின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற அகிலேஷ் யாதவ், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனது பயணத்தைத் தடுத்ததற்கு மாநில பாஜக அரசிடம் இருந்து எந்த விளக்கமும் இல்லை. எனது பயணத்தைத் தடுத்ததற்கான காரணத்தை அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன் என்பதால், அதற்குப் பிறகு பயணம் மேற்கொள்ளவில்லை.

ஆனால், பாஜக அரசு அவ்வளவு வலிமையானது என்றால், மக்களின் பணத்தோடு வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்லும் நபர்களைப் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு தடுக்காதது ஏன்? அப்படியானால், அரசின் உதவியோடு தானே அவர்கள் தப்பித்துச் சென்றிருக்க வேண்டும்? பாஜக தனது நண்பர்களை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல உதவியிருக்கிறது. அவர்கள் தற்போது பாஜகவின் புகழைப் பரப்பி வருகின்றனர். 

சமாஜவாதி கட்சியின் மீது பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் பாஜகவுக்கு சமாஜவாதி கட்சியின் இளைஞரணியினர் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடி வீரர்களாக மாறி, பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com