போதைப்பொருள் வைத்திருந்ததாக கோவாவில் 4 ரஷிய நாட்டினர் கைது

கோவாவின் வடக்குப்பகுதியிலுள்ள மாண்ட்ரம் கிராமத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவாவின் வடக்குப்பகுதியிலுள்ள மாண்ட்ரம் கிராமத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து  பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோவா மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு ஏ.டி.எம். மைய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று தெரிவித்தனர். 

மான்ட்ரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி  குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரோவிச் ஸ்டென்னிகாவ் (30) என்பவர் வசித்து வந்த வாடகை வீட்டில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததை கண்டு, அவரை கைது செய்ததாக மாவட்ட காவல்துறை எஸ்.பி. சந்தன் செளதரி தெரிவித்தார். 

விசாரணையில், கோவாவில் பர்னம் தாலுக்காவுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும், ரஷியர்கள் சொந்தத் தேவைக்காக கஞ்சா செடி வளர்த்து வருவதாக அலெக்ஸாண்ட்ரோவிச் தெரிவித்தார்.  

இதைத்தொடர்ந்து, அங்கு வசித்து வந்த மற்றொரு நபரான ரேடிக் வாஃபின் (35) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். வீட்டை சோதனை செய்தபோது, கஞ்சா தவிர மேலும் சில போதைப் பொருள்களும்  கண்டறிந்து, அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 

ரூ.2.09 லட்சம் ஆகும். மேலும் அவரிடமிருந்து, ஏ.டி.எம்.இயந்திரங்களை உடைக்க பயன்படுத்தப்படும் கேஸ்-கட்டர், வெடிப்பொருள்கள்களையும் போலீஸார் கைப்பற்றினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈவ்ஜென்னீ ஜாக்ரீன் (38) என்பவரையும், அவரிடம் இருந்து ரூ.2.38 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களையும் போலீஸார் கைப்பற்றினர். 

அதேபோல, இகார் மார்கோவ் (32) என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்தும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது. 

கைப்பற்றப்பட்ட நால்வரும் யாரிடம் இருந்து போதைப்பொருள்களை வாங்கி விற்பனை செய்தார்கள் என்பது குறித்தும், அவர்களது தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி. சந்தன் செளதரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com