காஷ்மீர் பணியில் இருக்கும் துணை ராணுவ படையினருக்கு இடர்பாட்டு படி அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினருக்கான  இடர்பாட்டுப் படியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
காஷ்மீர் பணியில் இருக்கும் துணை ராணுவ படையினருக்கு இடர்பாட்டு படி அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினருக்கான  இடர்பாட்டுப் படியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
அந்த மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. 
இடர்பாட்டுப் படி மட்டுமல்லாமல், மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினருக்கான சிறப்பு பலன்களுக்குரிய தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்ஸல் பாதிப்பு மாநிலங்களில் பணியில் இருக்கும் மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினருக்கான இடர்பாட்டுப் படியானது அதிகரிக்கப்படுகிறது.
அவர்களில், ஆய்வாளர்கள் வரையிலான அந்தஸ்தில் உள்ளவர்களுக்கான இடர்பாட்டுப் படி ரூ.9,700-இல் இருந்து, ரூ.17,300-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவே, அதிகாரிகள் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கான இடர்பாட்டுப் படி ரூ.16,900-இல் இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
அதேபோல், அந்தப் படையினருக்கான சிறப்பு பலன்களுக்கான தொகை, குறைந்த ரேங்கில் இருப்பவர்களுக்கு ரூ.7,600-ஆகவும், அதிகாரிகள் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரூ.8,100-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுத காவல் படையினருக்கான இடர்பாட்டு படியை திருத்தியமைப்பது தொடர்பாக, மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் கடந்த 2017-ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையானது அப்போது முதல் நிலுவையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம், புல்வாமா, அனந்த்நாக், பாரமுல்லா, குப்வாரா, குல்காம், சோபியான், கிஷ்த்வர், தோடா, ராம்பன், உதம்பூர் ஆகிய பகுதிகளிலும், தெலங்கானா மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலும் பணியில் உள்ள துணை ராணுவப் படையினர் அதிகரிக்கப்பட்ட இடர்பாட்டுப் படியை பெறுவர்.
இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகள் உள்பட அந்த மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பணியில் இருப்பவர்கள், இந்த சிறப்பு இடர்பாட்டு படியை பெறுவர்.
அதேபோல், நக்ஸல் பாதிப்புக்குள்ளான சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா, தண்டேவாடா, பிஜபூர், நாராயண்பூர், பஸ்தர் பகுதிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேஹர், மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி, ஒடிஸா மாநிலத்தின் மால்கான்கிரி ஆகிய பகுதிகளும் இந்த சிறப்பு இடர்பாட்டு படி வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியில் இருக்கும் துணை ராணுவப் படையினர் விமான, ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com