
பாகிஸ்தான் பிடியிலிருக்கும் இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை பத்திரமாகவும், உடனடியாகவும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பு குறித்த ஆதாரங்களும் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டன.
முன்னதாக, பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை குண்டு வீசித் தகர்த்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப் படை புதன்கிழமை தாக்குதல் நடத்த முயன்றது.
எனினும், இந்திய விமானப் படை அந்த முயற்சியை முறியடித்தது. அந்த நடவடிக்கையின்போது காணாமல் போன இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தான் பிடியில் உள்ளார்.
இச்சூழலில் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்காக, தில்லியில் உள்ள அந்நாட்டு தூதர் (பொறுப்பு) சையது ஹைதர் ஷாவை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா, தனது பாதுகாப்புக்காக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கான உரிமையை கொண்டுள்ளது என பாகிஸ்தான் தூதரிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் விமானப் படையின் தாக்குதல் முயற்சியானது, இந்திய வான் எல்லையில் அத்துமீறிய செயலாகும்.
சர்வதேச நாடுகளின் வலியுறுத்தல் மற்றும் இந்தியாவுடனான இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, இந்தியாவின் மீது பாகிஸ்தான் தனது ஆக்ரோஷத்தை காட்டுவது துரதிருஷ்டவசமானது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் அதை மறுத்து வருவது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தற்போது அந்நாட்டு பிடியில் இருக்கும் இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனுக்கு எந்தவொரு பாதிப்பும் நேரக் கூடாது எனவும், அவர் உடனடியாக, பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அபிநந்தன் காயமடைந்த நிலையில் இருக்கும் விடியோவை பாகிஸ்தான் வெளியிட்டிருப்பது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் ஜெனீவா மாநாட்டு விதிகளை மீறிய செயல் எனவும், அந்நாட்டு தூதரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ஆதாரங்கள் ஒப்படைப்பு: இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பு குறித்த ஆதாரங்கள் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், பாகிஸ்தானில் அந்த பயங்கரவாத அமைப்பின் முகாம்களும், தலைமையும் செயல்பட்டு வருவது குறித்த ஆதாரங்களும் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டன.
தனது கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீத பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.