
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக, ஜம்முவில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அப்போது நடுவானில் இருநாடுகளின் போர் விமானங்கள் இடையே நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தானுக்கு சொந்தமான எப்.16 ரக போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இதேபோல், இந்திய விமானமும் பாகிஸ்தான் விமானத்தின் தாக்குதலுக்கு இலக்காகி தரையில் விழுந்தது. அதில் இருந்த விமானி, பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளார்.
புல்வாமா தற்கொலைத் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் பாலாகோட், முசாஃபராபாத், சகோட்டி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து இந்திய போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குண்டுமழை பொழிந்தன. இதில் பயங்கரவாதிகள், தளபதிகள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்பட்டதால், அந்நாட்டையொட்டிய எல்லைப் பகுதிகள் நெடுகிலும் கண்காணிப்பை இந்தியா அதிகரித்திருந்தது.
இந்நிலையில், ஜம்மு பிராந்தியம் பூஞ்ச், ரஜௌரி செக்டார் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானிடமுள்ள அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் புதன்கிழமை காலை ஊடுருவின. பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவியதை உடனடியாக கண்டுபிடித்து, அவற்றை வழிமறித்து இந்திய போர் விமானங்கள் விரட்டின. அப்போது இருநாடுகளின் போர் விமானங்களுக்கு இடையே நடுவானில் சண்டை நடைபெற்றது. ரஜௌரி செக்டாரில் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானம் ஒன்று இந்திய போர் விமானங்களால் சுட்டுவீழ்த்தப்பட்டது. அந்த விமானம், பாகிஸ்தான் பகுதியில் தீப்பிடித்து விழுந்தது. எஞ்சிய விமானங்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றன. அப்போது சில வெடிகுண்டுகளை இந்திய பகுதியினுள் அந்த விமானங்கள் வீசிச் சென்றன. இதில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
முன்னதாக, பாகிஸ்தான் போர் விமானங்களுடன் நடுவானில் நடைபெற்ற சண்டையில், இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானம் தாக்கப்பட்டு தரையில் விழுந்தது. அதிலிருந்த விமானியைக் காணவில்லை. அவரை பிடித்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ராணுவம் 46 விநாடிகள் ஓடக்கூடிய விடியோவை வெளியிட்டது. அதில் பேசும் நபர், எனது பெயர் அபிநந்தன் வர்தமான்; இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றுகிறேன் எனத் தெரிவிக்கிறார். அந்த விடியோ உண்மையானதுதானா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், விமானப்படை துணை தளபதி ஆர்.ஜி.கே. கபூர் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் படையினர் அத்துமீறல்: ரஜௌரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர், இந்திய நிலைகளை குறிவைத்தும், கிராமங்களை குறிவைத்தும் புதன்கிழமையும் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
எல்லையில் போர் பதற்றம்: இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வந்தது, இருநாடுகளின் போர் விமானங்கள் நடுவானில் சண்டையிட்டது, எல்லையில் அத்துமீறிய தாக்குதல் போன்ற சம்பவங்களால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையினரின் அத்துமீறலை கவனத்தில் கொண்டு, எல்லையோர கிராமங்களில் வாழும் மக்களை அவர்களது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்கும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியின் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 9 விமான நிலையங்களும் காலையில் மூடப்பட்டன. எனினும், அந்த விமான நிலையங்கள் மாலையில் விமான போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டன.
மோடியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பு
பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவி வந்தது குறித்து தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாதுகாப்புப் படை, உளவுத்துறை அதிகாரிகள் விளக்கினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் உடனிருந்தார்.
உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதிரடிப்படை வீரர்களை அனுப்ப முடியும்: அருண் ஜேட்லி
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாகிஸ்தானின் அபோதாபாத் நகருக்குள் புகுந்து அல்காய்தா தலைவர் பின் லேடனை அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றது போல், இந்தியாவாலும் அதிரடிப்படை வீரர்களை அனுப்பி தாக்குதல் தொடுக்க முடியும் என்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டடங்களை விமானங்களை கடத்தி சென்று பயங்கரவாதிகள் கடந்த 2001ஆம் ஆண்டு தகர்த்தனர். இதில் சுமார் 3,000 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா கொன்றது குறிப்பிடத்தக்கது.
2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம்: பாகிஸ்தான்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி விட்டதாகவும், விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இருந்தபடியே, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் உள்ள 6 இடங்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவ நிலைகள், பிற அமைப்புகள் ஆகியவைதான் குறிவைக்கப்பட்டன. ஆனால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, இலக்குகளை பாகிஸ்தான் விமானங்கள் மாற்றிக் கொண்டன. இதனால் வெட்ட வெளிகளில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவற்றில் பிம்பர் கலி, நரான் ஆகிய இடங்களில் இருக்கும் ஆயுத விநியோக கூடங்களும் அடங்கும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான் பகுதிக்குள் மிக் ரகத்தைச் சேர்ந்த 2 இந்திய போர் விமானங்கள் ஊடுருவின.
அவற்றை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தின. அதில் ஒரு விமானம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், இன்னொரு விமானம் ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும் விழுந்தன. விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்துள்ளோம். ராணுவ நெறிமுறைகளுக்கு உள்பட்டு அவர் நடத்தப்படுவார் (விமானியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சில ஆவணங்களையும் காண்பித்தார்).