
தில்லி-பாகிஸ்தானின் லாகூர் நகர் இடையேயான பேருந்து சேவை தொடரும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல், பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை நடவடிக்கை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படும் தில்லி-லாகூர் பேருந்து சேவை ரத்து செய்யப்படுமா? என கேள்வியெழுந்தது. இதை இந்தியா மறுத்துள்ளது. தில்லி-லாகூர் பேருந்து சேவை தொடரும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லி-லாகூர் பேருந்து சேவை தொடர்கிறது. அந்த பேருந்தில் புதன்கிழமை கூட 10 பேர், லாகூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அந்த சேவை சிறிது பாதிக்கப்பட்டது என்றார்.
தில்லியில் உள்ள அம்பேத்கர் போக்குவரத்து முனையத்திலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. தில்லியிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 தினங்கள் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜௌதா விரைவு ரயிலும் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலை, தில்லியிலிருந்து அட்டாரி எல்லை வரையிலும் இந்தியாவும், பின்னர் வாகா எல்லையில் இருந்து லாகூர் வரையில் பாகிஸ்தானும் இயக்குகின்றன.