
பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்களை கண்டறியும் வகையில், காஷ்மீரின் தெற்கு பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். ஜெய்ஷ்-ஏ-அகமது பயங்கரவாத இயக்கத்தில் செயல்பட்டு வரும் முசதீர் அகமது கான், சஜ்ஜத் பாத் ஆகியோரது வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக நிதியுதவி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. உலக அரங்கில் பலமுறை பாதுகாப்புப் படையினரால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் இல்லங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோன்று புதன்கிழமையும் சோதனை தொடர்ந்தது.
முன்னதாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களான மிர்வாய்ஸ் ஓமர் ஃபாரூக், நயீம் கிலானி, அவரது மகனும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரிவினைவாத குழுவை சேர்ந்தவருமான சையது அலி ஷா கிலானி, ஜேகேஎல்எஃப் தலைவர் யாசின் மாலிக், ஷபீர் ஷா, அஷ்ரஃப் சாஹ்ராய், ஜாஃபர் பட் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட மொத்தம் 9 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது.