
தில்லியில் புதன்கிழமை நடந்த, தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்ற பெண்ணுக்கு சான்றிதழ் வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி. உடன்: மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர்.
மாநிலங்களவை நடவடிக்கைகள் பெரும்பகுதி முடங்கியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கவலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அந்த எம்.பி.க்களிடம் இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா, தில்லியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விருது வழங்கிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவையை முடக்கிய எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்தார்.
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. அங்கு எதிர்க்கட்சிகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்புவது வாடிக்கையான ஒன்றாக இருந்தது.
குறிப்பாக, வெவ்வேறு விவகாரங்களில் மத்திய அரசை விமர்சித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது தொடர்கதையானது. கடந்த, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மாநிலங்களவை 8 சதவீதம் மட்டுமே செயல்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி அதுகுறித்துப் பேசுகையில், இளைஞர்கள் தாங்களது மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், அவை முடக்கப்படுவது குறித்து அப்போது கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தில்லியில் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்ட தேசிய போர் நினைவுச் சின்னம், மத்திய தில்லியில் உள்ள காவலர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை இளைஞர்கள் பார்வையிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார். ஊழலை தடுக்க தங்களது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், முதல் முறையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.