
இந்திய விமானப் படை அதிகாரி காணாமல் போயுள்ள நிலையில், அவருக்காக அரசியல் தலைவர்கள் பலர் கவலை தெரிவித்துள்லனர். மேலும், அவர் விரைந்து திரும்பி வர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை விமானங்கள் குண்டுகள் வீசித் தகர்த்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்த முயன்றது.
அதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன் காணாமல் போயுள்ளதாக இந்தியா புதன்கிழமை தெரிவித்துள்ளது. அந்த விமானி பாகிஸ்தான் வசம் இருப்பதாக அந்நாடு கூறி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இந்திய விமானப் படை அதிகாரி காணாமல் போனது வருத்தமளிக்கிறது. அவர் பாதிப்பின்றி விரைவில் திரும்புவார் என்று நம்புகிறேன். இந்த இக்கட்டான சூழலில் நமது பாதுகாப்புப் படையினருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
ஒமர் அப்துல்லா: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், காணாமல் போன விமானப் படை அதிகாரி அபிநந்தன் பத்திரமாகத் திரும்பும் வரையில் பிரதமர் மோடி தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பாகிஸ்தானில் இந்திய வீரர் பிடிபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தனது வழக்கமான அரசியல் பேச்சுகளை பேசுவது சரியாக இருக்காது.
அதேவேளையில், இந்திய விமானப் படை அதிகாரியை பாகிஸ்தான் நல்ல முறையில் நடத்த வேண்டும். அபிநந்தன் விரைந்து நலமுடன் நாடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று அந்தப் பதிவில் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ்: சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், நமது துணிச்சல் மிகுந்த விமாப்படை அதிகாரி பத்திரமாகத் திரும்ப பிரார்த்திக்கிறேன். கடவுள் அவரைப் பாதுகாத்து, அவருக்கு தைரியம் அளிக்கட்டும். அந்த விமானப் படை அதிகாரிக்கு நாடே துணை நிற்கிறது என்று கூறியுள்ளார்.
அஸாதுதீன் ஒவைஸி: எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி தனது சுட்டுரைப் பதிவில், இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் பிடியிலிருக்கும் நமது விமானப் படை அதிகாரிக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம்.
ஜெனீவா மாநாட்டு விதி 3-இன் கீழ், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டு கைதிகளை மனிதநேயத்துடன் நடத்த வேண்டும். தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொள்ளாமல், இந்திய விமானப் படை அதிகாரியை பாகிஸ்தான் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.