
கூட்டறிக்கை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு பிறகு, 21 எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டன. அதில் இந்தியப் பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமாக அரசியலாக்குவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதற்கு சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
பாகிஸ்தான் விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒரே குரலை எதிரொலிக்கின்றன. அப்படியிருக்கையில், எதிர்க்கட்சிகள் மட்டும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுவது ஏன்?
ஆதலால் எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாடே ஒரு குரலை எதிரொலிக்கிறது. ஆதலால் எதிர்க்கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் மோசமான அறிவுரையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. புல்வாமாவில் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உண்மை. பாலாகோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படை தாக்குதல், நமது நாட்டின் இறையான்மையை காக்க நடத்தப்பட்டது என்று அதில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையால் யார் மகிழ்ச்சியடைவார்கள்? பாகிஸ்தானும், அதன் ராணுவம் மற்றும் ஊடகமும்தான் மகிழ்ச்சியடையும். இதுபோன்ற சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகள், விமர்சனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கும், எவ்வாறு கதையாக திரிக்கப்படும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையை பாகிஸ்தான் ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பில் இந்திய அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்ற பிரசாரம் செய்ய வழிவகுக்கும் என்றார்.