சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்கக் காவல் அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தியதற்கான ஆதாரங்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்கக் காவல் அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தியதற்கான ஆதாரங்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 
பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் அவர் ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியது. 
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ பலமுறை அழைப்பாணை அனுப்பியதாகவும், சிபிஐயின் ஆணையை அவர் தொடர்ந்து நிராகரித்ததாகவும் கூறி, அவரிடம் விசாரணை நடத்த கடந்த 3-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் செல்ல முயன்றனர்.
ஆனால், மேற்கு வங்க காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், மேற்கு வங்கக் காவலர்கள் அவருக்கு உதவி வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. பின்னர், சிபிஐயின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை எனவும், உரிய ஆவணங்கள் இன்றி ராஜீவ் குமாரை விசாரிக்க முயன்ற காரணத்தினாலேயே சிபிஐ அதிகாரிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் எனவும் ராஜீவ் குமார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்களை ராஜீவ் குமார் ஒப்படைக்கவில்லை என்பதற்கும், இது தொடர்பான விசாரணைக்கு அவரும், மேற்கு வங்கக் காவல் துறையினரும் ஒத்துழைக்க மறுத்தனர் என்பதற்கும் உரிய ஆதாரங்களைப் பிரமாணப் பத்திரமாக இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். குற்றச்சாட்டு குறித்த முழு விவரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் சிபிஐ தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com