மும்பையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: நாடு முழுவதும் 65 விமானங்கள் ரத்து

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் முக்கியப்


இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாடு முழுவதும் 65 வர்த்தக மற்றும் பயணிகள் விமானங்களின் சேவை முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படையினரை குறிவைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கடந்த 14ஆம் தேதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். 
இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிற்குள் புகுந்து இந்திய விமானப்படை போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு பிராந்தியத்திலுள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் புதன்கிழமை காலை தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டன. 
இந்த முயற்சியை இந்திய விமானப்படை விமானங்கள் முறியடித்தன.
இதேபோல், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏதேனும் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபடலாம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இதனால் மும்பையில் உள்ள ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், மேற்கு கடற்படை தலைமையகம், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய துணை ராணுவ படையினருடன், ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் விமான எதிர்ப்பு பிரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடல்வழியே தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எதிர்கொள்ள மேற்கு கடற்படையும் கடலோர பாதுகாப்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள துறைமுகம், ஒடிஸா மாநிலத்திலுள்ள பாராதீப் துறைமுகம் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களிலும் புதன்கிழமை சுமார் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதில் சர்வதேச விமானங்களும் அடங்கும். தில்லியில் மட்டும் அதிகப்பட்சமாக 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதையடுத்து மும்பையில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட தொகை முழுவதையும் திருப்பி அளித்தது. இருப்பினும், எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து ஸ்பைஸ் ஜெட் அறிவிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com