
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தன.
அப்போது, மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று கடந்த 1994-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு, அதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மேலும், இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி, அயோத்தி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த அக்டோபர் 29-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களை புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வரும் ஜனவரி மாதம் விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.