மேகாலய சுரங்க மீட்புப் பணி: உச்சநீதிமன்றம் அதிருப்தி

மேகாலய மாநிலத்தில் ஆற்று வெள்ளம் புகுந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து 22 நாள்களாக எவ்வித முன்னேற்றமும்
மேகாலய சுரங்க மீட்புப் பணி: உச்சநீதிமன்றம் அதிருப்தி


மேகாலய மாநிலத்தில் ஆற்று வெள்ளம் புகுந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து 22 நாள்களாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த மாநில அரசின் மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை உயிருடனோ அல்லது சடலமாகவோ விரைந்து மீட்டெடுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேகாலயத்தின் கிழக்கு ஜைந்தியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் அருகே பாயும் லைடெய்ன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததை அடுத்து, 370 அடி ஆழமுள்ள அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த மாதம் 13-ஆம் தேதி வெள்ள நீர் புகுந்தது. இதில் 15 தொழிலாளர்கள் அந்தச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கு சிக்கி 20 நாள்களுக்கு மேல் ஆகியும், அவர்களை மீட்பதில் இன்னும் சிக்கல் நிலவி வருகிறது.
இதனிடையே, மீட்புப் பணியை துரிதப்படுத்த மத்திய அரசுக்கும், அரசுத் துறையினருக்கும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஆதித்யா என். பிரசாத் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 
அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறியதாவது:
சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் எனும்போது, அதற்கு விரைவான, பயனுள்ள நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 72 பேர், மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போதும் இன்னும் யாரையும் மீட்க இயலவில்லை என்றால், ராணுவத்தின் உதவியை நாடி இருக்க வேண்டும். ராணுவம் உதவி செய்ய தயாராக உள்ளது. இந்த நேரத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். மேலும், இந்த பொது நல மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com