எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய தம்பிதுரை வேண்டுகோள்

அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 45 எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை
மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசுகிறார் தம்பிதுரை
மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசுகிறார் தம்பிதுரை


அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 45 எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை அதிமுக மூத்த தலைவரும், மக்களவைத் துணைத் தலைவருமான தம்பிதுரை கேட்டுக்கொண்டார். 
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய தம்பிதுரை, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மக்களவைத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைநான் எதிர்க்கவில்லை. விதிமீறலை பொறுத்துக் கொள்ள முடியாது. அதேநேரத்தில், உறுப்பினர்கள் தங்கள் மாநில பிரச்னைகளை முன்வைத்தே அமளியில் ஈடுபட்டனர். இன்னும் இரண்டு நாள் மட்டுமே அவை நடைபெற உள்ளதால், அவர்களை மன்னிக்க வேண்டும். அவர்களை ஏற்கெனவே நீங்கள் தன்டித்து விட்டீர்கள். ஆகையால், அவர்களை திங்கள்கிழமை முதல் அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில் அவர்கள் அவையின் மையப் பகுதியில் வந்து அமளியில் ஈடுபடவும் கூடாது என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சுமித்ரா மகாஜன், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், அவையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் எம்பிக்கள் மீது மக்களுக்கு தவறான கண்ணோட்டம் ஏற்படும். பொறுத்துக் கொள்ள முடியாத வகையில் சில உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். அவர்கள் மீண்டும் அவையில் மையப் பகுதியில் வந்து அமளியில் ஈடுபடமாட்டார்கள் என்று யார் உறுதி அளிப்பார்கள்? இந்த விவகாரத்தை அனைத்து கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என்றார்.
முன்னதாக, மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி புதன்கிழமை அவையின் மையப்பகுதியில் அமளியில் ஈடுபட்ட 24 அதிமுக எம்பிக்களும், வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட 7 அதிமுக எம்பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதியை வழங்கக் கோரி அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியின் 13 எம்பிக்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா புட்டா ஆகியோரை இடைநீக்கம் செய்து சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதன் மூலம் இரண்டு நாள்களில் மொத்தம் 45 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுப்பதாக கூறி, மாநிலங்களவையில் இருந்து அதிமுக, திமுக எம்பிக்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவையில் பேசிய மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மேக்கேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதேபோல் கேரள மாநிலத்தில் நடைபெற்ற முழு அடைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற இடதுசாரி உறுப்பினர்களின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுத்தார். இதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com