ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: மக்களவையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ரூ.1.30 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும், தனக்கு வேண்டிய நபரின் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இத்தகைய மிகப் பெரிய அளவிலான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும்.
தேவையில்லாத இடங்களில் ரஃபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், உரிய இடத்தில் அது குறித்து பேச அவர் மறுத்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை முன்பு பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தில், பிரதமர் மோடி பங்கேற்று விளக்கமளிக்காத வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. ஆனால், இந்த விவகாரத்தை பிரதமர் மோடி அலட்சியப்படுத்தி வருகிறார்.
பொய்ப் பிரசாரம்: ரஃபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துவது பொருத்தமாக இருக்காது. அதிலும், ரஃபேல் போர் விமானத்தின் தொழில்நுட்பங்கள் குறித்து ஆராயவில்லை என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. அப்படியிருக்கையில், மத்திய அரசு முற்றிலும் குற்றமற்றது என்று, மக்களிடையே பொய்ப் பிரசாரத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்த அறிக்கை ஒன்றை கணக்குத் தணிக்கையாளரிடம் (சிஏஜி) தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை பொதுக் கணக்குக் குழு பார்வையிட்டு விட்டதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் அப்படியொரு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவே இல்லை. இவை போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது.
ஒருவேளை அப்படியொரு அறிக்கையை மத்திய அரசு சிஏஜியிடம் சமர்ப்பித்திருந்தால், அந்த அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அரசுக்குப் பெரும் இழப்பு: இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொண்டதில், அரசுக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்போது, தேசப் பாதுகாப்பையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் சேர்ந்துகொண்டு, நிதியமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் உண்மையை மறைத்து வருகின்றனர்.
டஸால்ட் நிறுவனமானது, ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவுக்கு அளித்ததைவிட கத்தார், எகிப்து ஆகிய நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் அளித்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com