ராமர் கோயில் விவகாரத்தில் தடையை உருவாக்குகிறது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தி வருகிறது; காங்கிரஸின் செயல்பாட்டை ராம பக்தர்கள் எதிர்க்க
ராமர் கோயில் விவகாரத்தில் தடையை உருவாக்குகிறது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு


ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தி வருகிறது; காங்கிரஸின் செயல்பாட்டை ராம பக்தர்கள் எதிர்க்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
அமேதியில் செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இரானி மேலும் கூறியதாவது: மக்களின் நம்பிக்கைக்கு உரிய ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் தன்னுடைய வழக்குரைஞர்கள் மூலமாக அரசியல் செய்கிறது. அக்கட்சியின் தலைவர்கள், வழக்குரைஞர்கள் மூலமாக நீதி மன்றத்தில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும், 3 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு அக்கட்சியின் தலைவர்கள் இன்னும் தீவிரமாக இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மக்களும், ராம பக்தர்களும் எதிர்க்க வேண்டும் என்றார். 
காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்குரைஞருமான கபில் சிபில், ராமஜென்ம பூமி வழக்கு விசாரணையை 2019இல் நடைபெற உள்ள பொதுத் தேர்தல் வரை ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவித்தார். 
அண்மையில் அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி வருகை தந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஸ்மிருதி கூறியதாவது: அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி 5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறார். தற்போது தேர்தல் நெருங்குவதால் வாக்குகளை பெறுவதற்காக தொகுதி மக்களை சந்திப்பதற்காக மீண்டும், மீண்டும் வந்து செல்வார் என்றார். 
அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக ராகுல் காந்தி வெற்றி பெற்ற போதிலும், இத்தொகுதியின் வளர்ச்சிக்காக எதையும் செய்ததில்லை. அதேசமயம், மோடி கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இத்தொகுதி மக்களுக்காக செய்துள்ளார். 
அமேதி தொகுதியை ராகுல் வளர்ச்சியடைய முயற்சிக்காததால்தான் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமேதி உள்ளிட்ட பல தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. 
ராகுல் வளர்ச்சியைப் பற்றி பேசுவார்; ஆனால் தன்னுடைய சொந்தத் தொகுதியான அமேதியில் அதை செய்ய மாட்டார். குறைந்தபட்சம், அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதியைக் கூட அவர் செய்து தரவில்லை. ஆனால், அந்த வசதியை இன்று பாஜக அரசுதான் ஏற்படுத்தி தந்துள்ளது. 
அமேதியில் ராகுல்காந்தி மக்களை எத்தனை முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸார் அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டை பரப்பினார்கள். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவர்களது குற்றச்சாட்டு தவறானது என்பது நிரூபணமாகி விட்டது என்றார் ஸ்மிருதி இரானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com