வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

பொதுத் துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி


பொதுத் துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை, விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வங்கிகள் இணைப்பால் அங்கு பணியாற்றுபவர்கள் யாரும் வேலையை இழக்கப்போவதில்லை. பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி மிகப்பெரிய அமைப்பாக செயல்படுவதைப்போல இணைக்கப்படும் வங்கிகளும் பிரமாண்டமாக உருவெடுக்கும். இதுதவிர வங்கிகள் கடன் அளிப்பதற்கான நடைமுறைச் செலவுகளும் வெகுவாகக் குறையும்.
மொத்தமுள்ள 21 பொதுத் துறை வங்கிகளில், 11 வங்கிகள் அதிக வாராக்கடன் சுமையுடன் செயல்பட்டு வந்தது. அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திவால் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வங்கி வாராக்கடன் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரூ.51,533 கோடி மூலதனம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2018-19 பட்ஜெட்டில் வங்கிகளுக்கு மறுமூலதனமாக அளிக்க ரூ.65,000 கோடி ஒதுக்கப்பட்டது.
நிதிக் குழு விவகாரம்: 15-ஆவது நிதிக்குழு நிறைவேற்ற வேண்டிய பணிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மக்கள்தொகை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மக்கள்தொகையைக் குறைக்க மாநிலங்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து, 15-ஆவது நிதிக்குழுவால் தமிழ்நாடும், கேரளமும் அதிகம் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கவலை தெரிவித்ததற்கு பதிலளித்து பேசிய ஜேட்லி, தமிழ்நாடும், கேரளமும் கொள்கைகளை சிறப்பாக அமல்படுத்தி மக்கள்தொகையை குறைத்துள்ளன. அவர்களுக்கு பாதகம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாட்டின் வருவாய் ஆதாரங்கள், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான வரிப் பகிர்வுகள் உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஐந்தாண்டுக்கு ஒரு முறை நிதிக் குழு அமைக்கப்படும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்த வரைவுக் கொள்கைகளையும் அக்குழு வகுக்கும். இந்நிலையில், 14-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரைகள் வரும் 2020-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளன. அதைக் கருத்தில்கொண்டு, 15-ஆவது நிதிக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு அளிக்கும் பரிந்துரைகளானது வரும் 2020-இல் இருந்து 2025-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
முன்பு வரை 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையாகக் கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கான வரி வருவாயைப் பகிர்ந்தளிக்க புதிய நிதிக் குழு முடிவு செய்தது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொண்டால் தென் மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதி வெகுவாகக் குறைந்துவிடும். ஏனெனில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தென் மாநிலங்கள் சிறப்பாக அமல்படுத்தியதால், வட மாநிலங்களைவிட இங்கு மக்கள்தொகை பெருக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. நாட்டின் நன்மை கருதி மக்கள்தொகை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது பாதகமான விஷயமாகும். அதே நேரத்தில் மக்கள்தொகை குறைக்காத வடமாநிலங்களுக்கு அதிக நிதி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com