Enable Javscript for better performance
ஒரே நாளில் 13 நிலக்கரி சுரங்க குத்தகைக்கு அனுமதி: அகிலேஷ் யாதவ் மீது சிபிஐ குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஒரே நாளில் 13 நிலக்கரி சுரங்க குத்தகைக்கு அனுமதி: அகிலேஷ் யாதவ் மீது சிபிஐ குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 08th January 2019 12:53 AM  |   அ+அ அ-   |    |  

    akilesh


    உத்தரப் பிரதேசத்தில் மின்னணு முறையில் சுரங்கங்களை ஏலம் விட வேண்டும் என்ற விதியை மீறி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் ஒரே நாளில் 13 நிலக்கரி சுரங்க குத்தகைக்கு அனுமதி அளித்தார் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
    முன்னதாக, மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ அமைப்பை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கடந்த 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க குத்தகை வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், கடந்த சனிக்கிழமை 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 
    முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இதில் சமாஜவாதி எம்எல்சி ரமேஷ் குமார், ஐஏஎஸ் அதிகாரி பி.சந்திரகலா உள்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையில் சிபிஐ அமைப்பை பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. முக்கியமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக வரும் தேர்தலில் போட்டியிட அணி திரளும் கட்சியினரை மிரட்டும் நோக்கில் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. 
    இதன் மூலம் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. முன்பு, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இப்போது, பாஜக ஆட்சியிலும் இது தொடர்கிறது என்றார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஹமீர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கூறுகையில், மின்னணு முறையில்தான் சுரங்க ஏலம் நடைபெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது. 
    ஆனால், இந்த சுரங்க முறைகேடு நிகழ்ந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ், 2013 பிப்ரவரி 13-ஆம் தேதி ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைக்கு அனுமதி அளித்துள்ளார். இது கடுமையான விதிமீறல் என்று தெரிவித்துள்ளனர்.

    அகிலேஷுக்கு பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு
    சட்டவிரோத சுரங்க வழக்கு விவகாரத்தில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
    இந்த வழக்கு தொடர்பாக தில்லி, லக்னௌ உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் காயத்ரி பிரஜாபதி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அகிலேஷை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசியது தொடர்பான செய்திகள் வெளியான தினத்தில், பழைய சுரங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தி பாஜக அரசு சோதனை நடத்தியுள்ளது. 
    மேலும், அகிலேஷ் யாதவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்ற செய்தியையும் திட்டமிட்டு பரப்பி வருகிறது. சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கை இல்லையா இது?
    சிபிஐ சோதனைகளும், சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று மிரட்டுவதும் பாஜகவின் அரசியல் விரோதத்தைக் காட்டுகின்றன. இத்தகைய அரசியல் சதியும், கீழ்த்தரமான அரசியலும் பாஜகவுக்குப் புதிதல்ல. இதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அவர்கள் சரியான பாடம் புகட்டுவர்.
    கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு உடன்படாத காரணத்தால், 2003ஆம் ஆண்டில் தாஜ் காரிடார் வழக்கில் நான் சிக்கவைக்கப்பட்டேன். இதற்காக பின்னர் மக்கள் பழிவாங்கினார்கள். 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எனவே, இந்த விவாகரம் குறித்து அகிலேஷ் கவலை கொள்ளத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
    பழிவாங்கும் நடவடிக்கை-காங்கிரஸ்: இந்த விவகாரத்தில் அகிலேஷுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அகிலேஷ் யாதவுக்கு எதிரான சிபிஐ நடவடிக்கை, பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். 
    எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதை காங்கிரஸ் கண்டிக்கிறது. இத்தகைய அரசியல் மற்றும் சர்வாதிகாரத்தனம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என்றார்.
    சர்வாதிகார அரசை வெளியேற்றும் தருணம்-ஆம் ஆத்மி: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலும், தமது ஆதரவை அகிலேஷுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், அகிலேஷ் யாதவ் மீது பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிபிஐயைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மோடிக்கு எதிரானவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்த துன்பத்தை மறக்க முடியாது. மத்தியிலுள்ள ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகார அரசை வெளியேற்றும் தருணம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp