சுடச்சுட

  

  அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இருந்து மூத்த நீதிபதி விலகல்

  By DIN  |   Published on : 11th January 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து மூத்த நீதிபதி யு.யு. லலித் விலகியுள்ளார். இதையடுத்து, புதிய அமர்வை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
  அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 
  இந்த மனுக்களை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திராசூட், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அமைத்தது. மேலும், அயோத்தி விவகாரத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வு 10ஆம் தேதி விசாரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.
  இதன்படி, உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை வியாழக்கிழமை (ஜன.10) விசாரணைக்கு எடுத்து கொள்ள இருந்தது. 
  இந்நிலையில், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் தவன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அளித்த வாக்குறுதியை அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் காக்கவில்லை. அவரது சார்பில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக நீதிபதி யு.யு. லலித் வாதாடியுள்ளார் என்றார்.
  இதைத் தொடர்ந்து, அயோத்தி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் நீடிக்க விரும்பவில்லை; அமர்வில் இருந்து விலகுகிறேன் என்று நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார். இதைக் கேட்ட ராஜீவ் தவன், அமர்வில் இருந்து நீதிபதி யு.யு. லலித் விலக வேண்டும் என தாம் வலியுறுத்தவில்லை என்றார். 
  மேலும் அவர், இந்த வழக்கு, 3 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் அதை 5 நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றிவிட்டார் . 5 நீதிபதிகள் அமர்வை அமைக்க நீதித்துறையின் உத்தரவு அவசியம் என்றார். இதை கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:
  2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற விதிகளில், மேல்முறையீடு தொடர்பான மனுக்களை, குறைந்தப்பட்சம் தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வுதான் கட்டாயம் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளின்படியே, 5 நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணையை தலைமை நீதிபதி மாற்றினார். 
  அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்ததில் தவறில்லை. வழக்கின் முக்கியத்துவம், சூழ்நிலைகள் ஆகியவற்றையும், வழக்குத் தொடர்பான ஆவணங்களை கருத்தில் கொண்டும் பார்க்கையில், இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும். இந்த வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்கள், மூடி முத்திரையிடப்பட்ட அறையில் 15 பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. 
  அவை அனைத்தும், உருது, சம்ஸ்கிருதம், ஹிந்தி, அரபிக், பெர்சியன் உள்ளிட்ட பலமொழிகளில் உள்ளன. இந்த ஆவணங்களை உச்சநீதிமன்ற பதிவாளர் துறை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணிக்கு தேவைப்பட்டால், மொழி பெயர்ப்பாளர்களை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் பயன்படுத்தலாம். 
  பின்னர் அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் 29ஆம் தேதி உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தாக்கல் செய்ய வேண்டும். இதை புதிதாக அமைக்கப்படும் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பரிசிலீக்கும் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai