சுடச்சுட

  

  மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக வியூகம்?

  By பெங்களூரு  |   Published on : 11th January 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karnataka

  கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க வியூகம் வகுத்துள்ளதாகவும், பொங்கல் விழாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  மஜதவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து கர்நாடகத்தில் ஆட்சி நடத்தி வருகின்றன. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் உருண்டோடியுள்ள நிலையில், மஜத மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்துவேறுபாடுகள் வெளிப்பட தொடங்கியுள்ளன. மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறியுள்ள நிலையில், இரு கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பரம் நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சித்துக் கொள்வது அதிகரித்துள்ளது. 
  அண்மையில் அமைச்சரவையை மாற்றியமைத்த காங்கிரஸ், ரமேஷ்ஜார்கிஹோளி, ஆர்.சங்கர் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு காலியாக இருந்த 6 உள்பட மொத்தம் 8 பேரை அமைச்சராக்கியது. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அமைச்சர் பதவி கிடைக்காததால் கே.சுதாகர், பி.சி.பாட்டீல் உள்ளிட்ட பல  எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். 
  அமைச்சரவையில் இருந்து கைவிடப்பட்ட ரமேஷ்ஜார்கிஹோளி, கட்சித்தலைவர்களின் தொடர்புக்கு வராததோடு, பாஜகதலைவர்களின் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார். கடந்த 15 நாள்களாக காங்கிரஸ் தலைவர்களின் கைக்கு சிக்காத ரமேஷ்ஜார்கிஹோளி, மும்பைக்கு சென்று மகாராஷ்டிர மாநிலத்தின் பாஜகமுதல்வர் தேவேந்திரஃபட்னாவிசை சந்தித்துள்ளார். 
  அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜகவுக்கு அழைத்துவந்தால், அரசியல் மற்றும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் மேற்பார்வையில் நடைபெற்றுவருவதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
  மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி முறிந்திருக்க வேண்டும். அதற்கு கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ள பாஜக, அதற்காக காய்களை நகர்த்தி வருகிறது. 
  ஒரு வாரத்துக்கு முன்பு புதுதில்லி சென்றிருந்த பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, 3 நாள்கள் முகாமிட்டு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
  ஆட்சிக் கவிழ்ப்புக்கு தேவையான எண்ணிக்கை பலம் கிடைத்தால் மட்டுமே அதில் ஈடுபடுவது என்பதில் உறுதியாக உள்ளதால், அமைச்சரவை விரிவாக்கம், வாரியம், கழகங்களுக்கு தலைவர்கள் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொங்கல் விழாவின்போது ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  காங்கிரஸ் மட்டுமல்லாது மஜதவில் அமைச்சர் பதவிக் கிடைக்காதவர்களை இழுக்கவும் பாஜக திட்டமிட்டு, அதற்கான திரைமறைவுவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 15 எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இது சாத்தியமாகும் நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் உள்ளனர்.ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டால், சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்துவிடும் மஜத-காங்கிரஸ் கூட்டணி முறிந்து மக்களவைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிடும் நிலை உருவாகும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. 
  மேலும் பாஜக ஆட்சி அமைக்க நேர்ந்தால், மக்களவைத் தேர்தலில் 28-இல் 22 தொகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம் என பாஜக கருதுகிறது. தேசிய அளவில் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலைத்திருக்க கர்நாடகத்தில் பெறும் அதிகப்படியான எம்பிக்களின் எண்ணிக்கை உதவும் என்று பாஜக எண்ணுகிறது.
  பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை உணர்ந்துள்ள காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் எதற்கு எதிர்வினையாக பாஜக எம்எல்ஏக்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர்க்கும்வகையில் புதுதில்லியில் ஜன.11, 12 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் புதுதில்லிக்கு புறப்பட்டுள்ளனர். அங்கு 2 நாள்கள் நடக்கும் தேசிய செயற்குழுவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்களை ஜன.13-ஆம் தேதி பிரதமர் மோடி, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்து பேசவிருக்கிறார்கள். 
  இதனிடையே, காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கை கோத்து செயல்படலாமா? என்று முதல்வர் குமாரசாமியும், அவரது சகோதரரும் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா யோசித்து, அதற்காக காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மஜதவுடன் கூட்டணி அமைக்க பாஜகவின் முன்னணித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
  அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கலாமே தவிர, மஜதவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்பது பாஜகவின் முன்னணித் தலைவர்களின் கருத்தாக உள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் செயல்பாடுகள், அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai