சுடச்சுட

  

  சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா

  By PTI  |   Published on : 11th January 2019 04:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AlokVerma


  புது தில்லி: சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி வியாழக்கிழமை அதிரடியாக பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

  தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


  அலோக் குமார் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழந்தார். 

  பிரச்னையின் தொடக்கம்: நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சிபிஐ-யில், இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

  தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், அவர் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது; அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

  மேலும், அலோக் குமார் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

  இதையடுத்து, சிபிஐ இயக்குநராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அலோக் குமார் வர்மா, 77 நாள்களுக்கு பிறகு தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வந்து தனது அலுவலகப் பணிகளை தொடர்ந்தார். பணிக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்து இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுகளை அலோக் குமார் வர்மா ரத்து செய்தார்.

  உயர்நிலைக் குழு அதிரடி முடிவு: இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமித்தார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

  இந்நிலையில், தில்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.

  கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த வழக்கு தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருப்பதாகக் கூறினார்.

  ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர்.

  இந்த நிலையில்தான், தனது பதவியை அலோக் வர்மா ராஜினாமா செய்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai