சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் அகிலேஷ் - மாயாவதி

  By PTI  |   Published on : 12th January 2019 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  maya_akile


  லக்னௌ: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சனிக்கிழமை கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்து தங்களது தேர்தல் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

  உத்தரப் பிரதேசத்தில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்து, சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டன. இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் ஒருமித்த முடிவை எட்டியுள்ளன.

  அதன்படி, உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், இதர 2 தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மாயாவதி.

  மேலும், உத்தரப்பிரதேசத்தில் சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் ரே பரேலி மற்றும் அமேதி தொகுதிகளில்  போட்டியிடப் போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய மாயாவதி, உறக்கத்தில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை எழுப்புவதற்கான மந்திரக் கயிறுதான் இந்த கூட்டணி என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

  மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தும் நோக்கில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் இருவரும் சனிக்கிழமை முதல்முறையாகக் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.

  இது குறித்து, அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை கூறுகையில், கடந்த முறை மக்களவைக்கான இடைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, பாஜக தோற்கடிக்கப்பட்டது. இந்த முறையும் பாஜகவைத் தோற்கடித்து, கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்தக் கூட்டணியால், பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சிக்கும் பயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

  தனித்துப் போட்டியிடத் தயார்: காங்கிரஸ்
  காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் பக்ஷி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 45 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை மற்ற மாநில கட்சிகளை விட அதிகமாகும். தேசிய அளவில் மகா கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். 

  ஒத்த கருத்துடைய கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம். அதே வேளையில், உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராக உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது என்றார்.

  இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல்.பூனியா, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார் ஆகியோர் கூறுகையில், இனியும் கூட்டணிக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. பிரதமர் மோடியைத் தோற்கடிக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். கடந்த 2009-ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 21 தொகுதிகளைக் கைப்பற்றியதை எவரும் மறந்துவிடக் கூடாது என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai