விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

2021-ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்


2021-ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த 2018-ஆம் ஆண்டில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 18 திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். இதில் 7 ராக்கெட், 9 விண்கலங்கள், ஒரு வெள்ளோட்டத் திட்டம் அடங்கும். 
இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் தற்போது 47 விண்கலங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவிலான 158 திட்டங்களில் 94-ஐ நிறைவேற்றியுள்ளோம். உன்னதி என்ற புதிய திட்டத்தை ஜன.17-ஆம் தேதி தொடங்கவிருக்கிறோம். இத் திட்டத்தில் 45 நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன. 
நானோ செயற்கைக்கோள்களைத் தயாரிக்க இந் நாடுகள் முன்வந்துள்ளன. இத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் 6 விண்வெளி சிக்கல் தீர்வு மையங்களைத் திறக்கவுள்ளோம். முதல் மையம் திரிபுராவில் அகர்தலாவில் தொடங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 5 மையங்கள் அடுத்தடுத்து திறக்கப்படும். இம் மையங்களில் புதிய தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை திட்டங்களாக அவர்கள் முன்வைக்க வேண்டும். இதற்கான நிதியுதவியை இஸ்ரோ செய்யும். 
நிகழாண்டு திட்டம்: நிகழ் நிதியாண்டில் இஸ்ரோவின் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, மார்க்-3 போன்ற ராக்கெட்டுகளைத் தயாரிக்க ரூ.10 ஆயிரம் கோடி, விண்கலங்களைத் தயாரிக்க ரூ.10 ஆயிரம் கோடி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் செலவிடப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இத் திட்டங்களை தனியார் விண்வெளி நிறுவனங்கள் தயாரிக்கவிருப்பதால், மொத்த நிதியில் 80 சதவீதம் அந் நிறுவனங்களுக்கே செல்லும்.
வீரர்கள் தேர்வு: பிரதமர் மோடியின் அறிவிப்புப்படி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன்(ககன்யான்) திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முனைப்புக் காட்டியுள்ளது. விண்வெளி வீரர்களை ராக்கெட் வழியே விண்ணுக்குக் கொண்டு சென்று, அங்கு விண்வெளி மையத்தில் 7 நாள்கள் தங்கவைத்து, மீண்டும் பூமிக்கு அழைத்துவருவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் ஆண்களுடன் பெண்களும் இடம்பெறத் தடையில்லை.
விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்யும் குழு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும். இந்தத் திட்டம் இஸ்ரோவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக அமையப்போகிறது. ராக்கெட், விண்கலம் உற்பத்தி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இஸ்ரோ, முதல்முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பவிருக்கிறது. இதற்காக தனி மையத்தைத் தொடங்கவிருக்கிறோம். 
பொறியியல் அறிவுடன் மனிதனை விண்ணுக்கு அழைத்துச் சென்று பூமிக்கு அழைத்து வரவேண்டிய மிகப் பொறுப்பு உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெங்களூரில் மனித விண்ணூர்தி மையம் தொடங்கப்படும். இதன் மைய இயக்குநராக டாக்டர் உண்ணிகிருஷ்ணன் செயல்படுவார். விண் மனிதன் திட்ட இயக்குநராக ஹட்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 
விண் மனிதன் திட்டம்: விண் மனிதன் திட்டத்தின் முதல்படியாக, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்குச் செலுத்தப்படும். அடுத்தகட்டமாக, 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு, 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மனிதனை சுமந்து செல்லும் விண்ணூர்தி விண்ணுக்கு அனுப்பப்படும். 
இந்தியாவின் சுதந்திர தின 75-ஆவது ஆண்டு விழா 2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படுவதால், அதையொட்டி விண் மனிதன் திட்டத்தைச் செயல்படுத்த பிரதமர் மோடி விரும்பினார். எனினும், ஆகஸ்ட் மாதத்துக்குள் விண்ணில் செலுத்த வசதியாகவே 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் விண் மனிதன் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இத் திட்டத்துக்கு ரூ.9023 கோடி செலவிடப்படும். 
பயிற்சி: விண் மனிதன் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவில் பயிற்சி வழங்கப்படும். இறுதிக்கட்டப் பயிற்சி ரஷியா போன்ற வெளிநாடுகளில் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், உலக அளவில் இச் சாதனையை புரிந்த 4-ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவைச் சேரும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com