சுடச்சுட

  

  அமைப்பு ரீதியிலான மாற்றங்களைக் கொண்டு விவசாயத்தை வலிமைப்படுத்த வேண்டும்

  By  மும்பை,  |   Published on : 13th January 2019 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  venkia

  நாட்டில் உள்ள 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தில், நீண்ட கால அமைப்பு ரீதியிலான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார்.
   நாட்டில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் பல மாநிலங்களிலும் விவசாயிகள் மடிந்துள்ளனர். விவசாயிகளின் இறப்பே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், வெங்கய்ய நாயுடுவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
   மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின்(சிஐஐ) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
   நாட்டில் உள்ள 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக உள்ளதுடன், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விவசாயம் உள்ளது. அதனால் விவசாயத்துறைக்கே அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும். விவசாயத்துறை லாபகரமானதாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் மாற்றப்பட வேண்டும். விவசாயத்தில் மட்டுமன்றி, அதுசார்ந்த துறைகளான தோட்டக்கலை, கோழி வளர்ப்பு, மீன்பிடித்தல் ஆகிய துறைகளில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். இந்தியாவில், தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அதனால் விவசாயத்தை விரிவுபடுத்த வேண்டும். இதனால், சுகாதாரம் நிறைந்த நாடான இந்தியா, வளமான நாடாக உருவாக முடியும். இயற்கை விவசாய முறையையும், நீர்ப்பாசன வசதியை சரியாக கையாளும் முறையையும் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
   மனித வாழ்க்கையை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிக அளவில் உள்ளது. அதனால் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். தினந்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கையாளும் வகையில், புதிய புத்தாக்கமான விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஆராச்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
   நாட்டை வளமான வழியில் வழிநடத்துவதற்கான திறமைகள் இன்றைய இளைஞர்களிடம் அதிகம் உள்ளன. அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக திறன் மேம்பாட்டு திட்டங்களை தனியார் துறையினர் மேற்கொள்ள வேண்டும். எவ்வித பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல் தனியார் துறையில் பெண்களுக்கு சம வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்கள் முன்னேற்றமும், பாலின சமத்துவமும் நமது தொழில் துறைகளின் அடிப்படைக் கொள்கைகளாக இருக்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai