சுடச்சுட

  

  உ.பி. யில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி: தலா 38 இடங்களில் போட்டி; காங்கிரஸுக்கு இடமில்லை

  By லக்னெள,  |   Published on : 13th January 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  up

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டனர். இக்கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை.
   மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன.
   அத்துடன், தங்களது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு இரு இடங்களை ஒதுக்கியுள்ளன. ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
   இதுகுறித்து மாயாவதி, அகிலேஷ் ஆகியோர் லக்னெளவில் சனிக்கிழமை செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறியதாவது:
   உத்தரப் பிரதேசத்தின் புல்பூர், கோரக்பூர், கைராணா மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எங்களது கூட்டணி பாஜகவை தோற்கடித்தது. எனவே, இக்கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவை வீழ்த்தும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். எங்கள் கூட்டணி மக்களவைத் தேர்தலைக் கடந்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தொடரும்.
   மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்றவை அதிகரித்ததுடன், பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களிலும் ஊழல் நடந்துள்ளது. எனவே, எங்களது கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை. முன்பு காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்திருக்கலாம்; ஆனால், இனி அந்த வாய்ப்புக்கு இடமில்லை.
   கடந்த கால தேர்தல்களில் எங்களது வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. ஆனால், நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அவர்களது வாக்குகள் எங்களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் பரஸ்பரம் வாக்குகளை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
   காங்கிரஸ்-பாஜக இடையே ஓர் ஒற்றுமை உண்டு. காங்கிரஸ் கட்சி அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. பாஜக, அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளது. போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரத்தால் காங்கிரஸ் சந்தித்த அதே நிலையை, தற்போது பாஜக ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தால் எதிர்கொள்கிறது. பாஜக சாராத வாக்குகளை பிரிக்கும் விதமாக சமீபத்தில் பிரகதிஷீல் சமாஜவாதி கட்சியை தொடங்கிய சிவ்பால் யாதவுக்கு பாஜக அதிக பணம் செலவழித்துள்ளது. அந்த முயற்சி வீணாவது உறுதி.
   பகுஜன் சமாஜ்-சமாஜவாதி இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் லக்னெள விருந்தினர் மாளிகை சம்பவத்தை பாஜக குறிப்பிட்டு வருகிறது. அக்கட்சி இம்முறை ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் அந்த சம்பவங்களை நாங்கள் புறந்தள்ளிவிட்டோம் என்று மாயாவதி கூறினார்.
   பின்னர் அகிலேஷ் யாதவ் அதை குறிப்பிட்டு பேசுகையில், "மாயாவதியை அவமதிக்கும் எந்தவொரு செயலும், என்னை அவமதிக்கும் செயலாகும்' என்று தனது கட்சியினரை மறைமுகமாக எச்சரித்தார்.
   மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய லோக் தளத்துடனான தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ், "அதுகுறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்' என்றார்.
   "இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதி இருப்பாரா?' என்ற கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், "உத்தரப் பிரதேசம் பல பிரதமர்களை நாட்டுக்கு அளித்துள்ளது. எனவே, உத்தரப் பிரதேசத்திலிருந்து மீண்டும் ஒருவர் பிரதமரானால் மகிழ்ச்சியே. நான் யாரை ஆதரிப்பேன் என உங்களுக்கே தெரியும்' என்றார்.
   இதனிடையே, மக்களவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவது குறித்த முடிவும் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று அகிலேஷ், மாயாவதி இருவரும் கூறினர்.
   கடந்த 1995-ஆம் ஆண்டு சமாஜவாதியுடனான கூட்டணியை, பகுஜன் சமாஜ் முறித்துக் கொண்டதை அடுத்து ஆத்திரமடைந்த சமாஜவாதி தொண்டர்கள், லக்னெளவில் மாயாவதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு சென்று அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
   வரவேற்பு: சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "மக்களவைத் தேர்தலுக்காக சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியை வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார்.
   அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இந்தக் கூட்டணிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
   இக்கூட்டணியால் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் கருத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளன என்றார்.
   கடந்த தேர்தலில்...: 2014 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 தொகுதிகளையும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் 2 இடங்களையும் கைப்பற்றின. சமாஜவாதி 5, காங்கிரஸ் 2 தொகுதிகளை வென்ற நிலையில், பகுஜன் சமாஜ் தோல்வியை சந்தித்தது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai