சுடச்சுட

  

  கேரளத்தில் பலத்த பாதுகாப்புடன் திருவாபரணப் பெட்டி ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 13th January 2019 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டி ஊர்வலம் சபரிமலையை நோக்கி சனிக்கிழமை தொடங்கியது.
   ஐயப்பனுக்கு மகரவிளக்கு நாளில் அணிவிப்பதற்காக திருவாபரணப் பெட்டி ஆண்டுதோறும் பந்தளத்திலிருந்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
   அதன்படி, நிகழாண்டில் திருவாபரணப் பெட்டி ஊர்வலம் சனிக்கிழமை தொடங்கியது. பந்தளத்தில் உள்ள வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் திருவாபரணப் பெட்டி சனிக்கிழமை காலை தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர், 3 மரப் பெட்டிகளில் ஆபரணங்கள் பிரித்து வைக்கப்பட்டன. இவற்றை, கங்காதரன் பிள்ளை தலைமையிலான 22 பேர் கொண்ட குழு ஊர்வலமாக சபரிமலைக்குக் கொண்டு செல்லத் தொடங்கியது.
   முன்னதாக, சாஸ்தா கோயில் தந்திரி திருவாபரணங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். பந்தளம் அரச குடும்பத்தினர் சார்பில் திருவாபரணப் பெட்டிக்குப் பாதுகாப்புக்காக பிரதிநிதி ஒருவர் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, அந்த பிரதிநிதிக்கு வாள் ஒன்றை பந்தள அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அளித்தார்.
   அரச குடும்ப பிரதிநிதி அருகில் உள்ள கைப்புழா அரண்மனைக்குப் பல்லக்கில் கொண்டு செல்லப்பட்டார்.
   அயிரூர் புதியகாவு தேவி கோயிலில் சனிக்கிழமை இரவு திருவாபரணப் பெட்டியுடன் அவர்கள் தங்குவார்கள். லாஹா பகுதியில் இரண்டாவது இரவுப் பொழுதைக் கழிப்பார்கள். 14-ஆம் தேதி காலை 5 மணிக்கு சரம்குத்தியை சென்றடையும் திருவாபரணப் பெட்டி, சந்நிதானத்தில் சரியாக 6 மணிக்கு கொண்டு செல்லப்படும். தீபாராதனைக்கு முன்பு ஐயப்பன் விக்கிரகத்துக்கு திருவாபரணங்களை தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு அணிவிப்பார்.
   திருவாபரணப் பெட்டி ஊர்வலத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
   நூற்றுக்கணக்கான பக்தர்களும் இருமுடியை சுமந்து கொண்டு திருவாபரண ஊர்வலத்தில் பங்கேற்றுச் செல்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai