சுடச்சுட

  

  ஜெகன்மோகன் மீதான தாக்குதல் தொடர்புடைய வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்: மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

  By  ஹைதராபாத்,  |   Published on : 13th January 2019 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CHANDRABABU3

  ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மத்திய அரசு மாற்றியதற்கு அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
   விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கையில் ஸ்ரீநிவாஸ் ராவ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் சிறிய ரக கத்தியைக் கொண்டு தாக்கினார். அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜெகன்மோகன் ரெட்டி மீது மக்கள் இரக்கம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கத்தியால் தாக்கியதாக அந்த நபர் தெரிவித்தார்.
   ஆந்திரப் பிரதேச அரசு, தாக்குதல் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
   எனினும், இதில் சதித்திட்டம் அடங்கியிருப்பதாக குற்றம்சாட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய விசாரணை அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
   அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தேசியப் புலனாய்வு அமைப்பு சட்டத்தின் பிரிவு 6இன் படி செயல்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், ஆந்திரப் பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
   இந்த வழக்கை என்ஐஏ அமைப்புக்கு மாற்றுவதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
   மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், ஹைதராபாதில் உள்ள என்ஐஏ பிரிவு, ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. எம்.சாஜித் கான் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக இந்த வழக்கை என்ஐஏ வசம் நீதிமன்றம் ஒப்படைத்தது.
   இந்நிலையில், பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
   கடத்தல், சர்வதேச அளவிலான தொடர்புகள், ஆயுதங்கள், போலி ரூபாய் நோட்டுகள், எல்லைகளில் ஊடுருவல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க விவகாரங்களை விசாரிப்பதற்காகவே என்ஐஏ அமைக்கப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கை அந்த அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதன் மூலம், என்ஐஏ சட்டத்தின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
   கடந்த 2009-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைக்கப்பட்டபோது, குஜராத் முதல்வராக இருந்த நீங்கள் (மோடி), அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விமர்சித்தீர்கள். ஆந்திரப் பிரதேச அரசு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையிலும், உள்துறை அமைச்சகம் என்ஐஏவுக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளது. தன்னிச்சையாகச் செயல்படும் மாநில அரசின் அமைப்புகளின் சுதந்திரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது என்று அந்தக் கடிதத்தில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai