சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே போட்டி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

  By DIN  |   Published on : 13th January 2019 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலானது, சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
   மத்தியில் எதற்கும் உதவாத (பயன்படாத) அரசு அமைய வேண்டுமா? அல்லது வலுவான அரசு அமைய வேண்டுமா? என்பதை மக்கள், வரும் தேர்தலில் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்ததற்கு, இவ்வாறு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
   இதுதொடர்பாக தில்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
   பாஜக தேசிய கவுன்சில் குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் உரை நிகழ்த்திய மோடி, காங்கிரஸ் கட்சி மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதேநேரத்தில், தனது அரசின் சாதனைகளான பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு தொடர்பாக தாம் அளித்த வாக்குறுதி, விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதை மோடி தவிர்த்து விட்டார்.
   2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலானது, எதற்கும் உதவாத அரசுக்கும், வலுவான அரசுக்கும் இடையேயான போட்டியாக இருக்காது. சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போட்டியாகவும், பேச்சுகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையேயான போட்டியாகமே இருக்கும். பல ஆண்டுகளாக காங்கிரஸ் தனது ஆட்சியின்போது செய்த சேவைகளுக்கும், வெற்று வாக்குறுதிக்கும் இடையேயான பரீட்சையாக இருக்கும்.
   மத்திய அரசு, நாட்டின் அமைப்புகளை பலவீனப்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியின்கீழ், நாட்டில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது உண்மையெனில், 19 வீரர்கள் கொல்லப்பட்ட உரி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், பதான்கோட் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றை என்னவென்று தெரிவிப்பது? இந்த 2 தாக்குதல்களும், 2016ஆம் ஆண்டில்தான் நடைபெற்றுள்ளன.
   ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் தற்போது மிகவும் மோசமாக உள்ளது. மத்திய அரசுக்கும், நாகா தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தான நாகா அமைதி ஒப்பந்தத்தால் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவில்லை.
   பாகிஸ்தான் தொடர்பாக மத்திய அரசு என்ன கொள்கையை கடைப்பிடிக்கிறது? இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடான ரஷியா, பாகிஸ்தானுக்கு ஏன் ஆயுத விற்பனை செய்கிறது? அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உங்களையும் (பிரதமர் மோடி), இந்தியாவின் ராஜீய நடவடிக்கையையும் கிண்டல் செய்வது ஏன்? இதற்கு மத்திய அரசும், பாஜகவும் ஏன் பதிலடி கொடுக்கவில்லை?
   குஜராத் முதல்வராக தாம் இருந்தபோது, சிபிஐயை அவருக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பயன்படுத்தியதாக மோடி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரை குறிவைக்க சிபிஐ அமைப்பு ஒருபோதும் காங்கிரஸ் ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது கிடையாது என்றார் மணீஷ் திவாரி.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai