சுடச்சுட

  

  மேக்கேதாட்டு அணை திட்டத்தை எதிர்த்தால் தமிழகத்தின் தொடர்பு துண்டிக்கப்படும்: கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ்

  By  பெங்களூரு,  |   Published on : 13th January 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேக்கேதாட்டு அணை திட்டத்தை எதிர்த்தால், தமிழகத்தின் தொடர்பை கர்நாடகம் துண்டிக்க நேரிடும் என கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
   கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதைக் கண்டித்து, கர்நாடகம்-தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் சனிக்கிழமை கன்னட சலுவளிக் கட்சி மற்றும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
   இரு மாநில எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டதால், எல்லையில் வாகனப் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. பின்னர், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, விடுவித்தனர்.
   முன்னதாக, செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியது: மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. அவ்வாறு எதிர்த்தால், வரும் காலங்களில் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையேயான அனைத்து விதமான தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்படும். மேலும், இந்த பிரச்னையில் கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அதன் முழுப் பொறுப்பும் தமிழகத்தையே சேரும்.
   மேக்கேதாட்டுவில் விரைந்து அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஜன. 27-ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கன்னட அமைப்புகள் நடத்தும். மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால், கர்நாடகத்தில் தமிழ் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
   மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடகத்துடன் தமிழகம் தேவையற்ற மோதல் போக்கில் ஈடுபடக் கூடாது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதியோ, ஒப்புதலோ தேவையில்லை. மேக்கேதாட்டு அணையை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தாதீர்கள் என்று தமிழக அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். மேக்கேதாட்டு விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை தொந்தரவு செய்ய நேரிடும்.
   காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து கர்நாடகத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அப்போதும் கர்நாடக மக்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு வருகிறோம். இந்த பிரச்னையில் இரு மாநில உறவில் விரிசல் ஏற்படுவதற்கு தமிழகம் இடம் தரக் கூடாது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai