சுடச்சுட

  

  18 மாநகராட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை

  By  மும்பை,  |   Published on : 13th January 2019 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்சித்தாவல் விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் 18 மாநகராட்சி உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கி தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
   மகாராஷ்டிரத்திலுள்ள அகமதுநகர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 மாநகராட்சி உறுப்பினர்கள், அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது கட்சித் தலைமைக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
   இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் சனிக்கிழமை கூறியதாவது:
   கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்பட்டது தொடர்பாகப் பதிலளிக்குமாறு அந்த 18 உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. அதே வேளையில், இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்காத அகமதுநகர் மாவட்ட கட்சித் தலைவரிடமும் விளக்கம் கோரப்பட்டது.
   ஆனால், 18 உறுப்பினர்களும், அகமதுநகர் மாவட்ட தலைவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.
   தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ""கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உறுப்பினர்களும் நீக்கப்பட்டுள்ளதால், அகமதுநகர் மாநகராட்சியில் கட்சி வலிமை இழந்துள்ளது. இருந்தபோதிலும், கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்பட்டு, கட்சிக்குத் துரோகம் இழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களுக்கு எதிராகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்'' என்றார்.
   முன்னதாக, அந்த உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai