சுடச்சுட

  

  3 மாநில தேர்தல் தோல்வியால் தளர வேண்டாம்: தொண்டர்களுக்கு அமித் ஷா அறிவுரை

  By DIN  |   Published on : 13th January 2019 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AmitShah

  மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்பதற்காக கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்; விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
   பாஜகவின் தேசிய அளவிலான 2 நாள் மாநாடு, தில்லி ராம்லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை, மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:
   இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் (காங்கிரஸ்), ஜாதியம், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி நெருக்கமானவர்களுக்கு உதவுவது, பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்குப் பதிலாக, மக்களை சாந்தப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவற்றைக் கொள்கைகளாகக் கொண்டிருந்தனர்.
   இதன் விளைவாக, ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது; நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
   அண்மையில் மூன்று மாநிலங்களில் (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்) நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றுள்ளனர்; ஆனால், நாம் தோற்றுப்போகவில்லை. தேர்தல் வெற்றி நமக்குச் சாதகமாக இல்லை என்றாலும், நாம் தேர்தல் களத்தை இழக்கவில்லை. எனவே, மூன்று மாநில தேர்தல் தோல்வியைக் கண்டு பாஜக தொண்டர்கள் யாரும் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்.
   விரைவில் நடைபெறக் கூடிய மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. அந்தத் தேர்தலில் பாஜகவை நாம் வெற்றிபெறச் செய்து விட்டால், உள்ளாட்சி அமைப்பு முதல் நாடாளுமன்றம் வரை பாஜகவே நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும்.
   எனவே, கட்சித் தொண்டர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்குச் சென்று காலையிலேயே தங்களது வாக்குகளைச் செலுத்திவிட வேண்டும்.
   இந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக, கட்சித் தொண்டர்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பிரசாரம் செய்ய வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்து, பிரதமர் மோடியை இரண்டாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றார் அமித் ஷா.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai