இந்திய வரலாற்றில் ஊழல் புகாரில்லாத ஒரே அரசு: மோடி பெருமிதம்

இந்திய வரலாற்றில் ஊழல் புகார் இல்லாத ஒரே அரசு, தமது தலைமையிலான மத்திய அரசுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் ஊழல் புகாரில்லாத ஒரே அரசு: மோடி பெருமிதம்

இந்திய வரலாற்றில் ஊழல் புகார் இல்லாத ஒரே அரசு, தமது தலைமையிலான மத்திய அரசுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
 தில்லியில் பாஜக தேசிய கவுன்சில் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை முதல் 2 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமை கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
 ஏற்கெனவே தோல்வியடைந்த ஒரு முயற்சியில் எதிர்க்கட்சிகள் தற்போது ஈடுபட்டுள்ளன. அது மகா கூட்டணி எனப்படுகிறது. நாட்டில் எதற்கும் உதவாத அரசு அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இந்த காரணத்துக்காகவே எதிர்க்கட்சிகள் கைகோத்துள்ளன.
 ஒரு நபருக்கு எதிராக அக்கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அப்படி எதற்கும் உதவாத அரசு அமைந்தால், தங்களால் ஊழலில் ஈடுபட முடியும், உறவினர்களுக்கு உதவு முடியும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், நமது விருப்பமோ, நாட்டில் வலுவான அரசு அமைப்பதுதான். அப்படி அமைந்தால், ஊழல் முடிவு கட்டப்பட்டு விடும். அனைவரும் வளர்ச்சியடைவது உறுதி செய்யப்படும்.
 ஆந்திரம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள், தங்களது மாநிலங்களில் சிபிஐ செயல்பட அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றுள்ளன. சிபிஐ செயல்படுவதை கண்டு ஏன் அந்த மாநில அரசுகள் அஞ்சுகின்றன? அச்சப்படும் வகையில், எந்த முறைகேடுகளிலாவது அந்த அரசுகள் ஈடுபட்டுள்ளனவா?
 முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில், சிபிஐ மூலமாக, குஜராத் முதல்வராக அப்போது இருந்த எனக்கு பல ஆண்டுகளாக துன்புறுத்தல்கள் அளிக்கப்பட்டன. என்னை சிறையில் அடைப்பதை குறிக்கோளாகக் கொண்டு, அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்தியது. குஜராத் அமைச்சராக இருந்த அமித் ஷாவை சிறையில் அடைத்தது. இருப்பினும், குஜராத்தில் சிபிஐ செயல்படுவதற்கு எனது அரசு தடை விதிக்கவில்லை. இதற்கு சட்டத்தின் மீதும், உண்மையின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையே காரணமாகும்.
 பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளது. வறுமை காரணமாக வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் இருந்த பொதுப் பிரிவு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை, இந்த இட ஒதுக்கீடு பூர்த்தி செய்யும். புதிய இந்தியா மீது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். பிறரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, தற்போது மத்தியில் உள்ள எனது தலைமையிலான அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. நாட்டை ஊழல் இல்லாமல் ஆட்சி செய்ய முடியும் என்பதை பாஜக நிரூபித்து காட்டியுள்ளது. கடினமாக நேர்மையுடன் உழைப்பவர் தங்களது பிரதம சேவகராக வேண்டுமா அல்லது அவசியமான நேரத்தில் வெளியூர் சென்று விடுபவர் வேண்டுமா? என்பதை நாட்டு மக்கள்தான் இனிமேல் முடிவு செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் ஒரு குடும்பத்தினரை ஒருவருடன் ஒருவரை மோத விடுபவரும், அந்த வீட்டில் இருக்கும் பொருள்களை திருடி, தனது உறவினர்களிடம் கொடுப்பவரும், வீட்டு ரகசியத்தை வெளியே சொல்லும் பணியாளை மக்கள் விரும்புவார்களா? அவசியமான நேரத்தில் விடுமுறையில் செல்பவர், தங்களுக்கு சேவகராக வேண்டும் என்று யாராவது விரும்புவரா? அவர் எங்கு சென்றார் என யாருக்கும் தெரியாது (காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தார்).
 அயோத்தி விவகாரத்தில் தீர்வு காணப்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. தனது வழக்குரைஞர்கள் மூலம், நீதித்துறை நடவடிக்கையை தாமதப்படுத்த அக்கட்சி முயலுகிறது. காங்கிரஸின் இந்த போக்கை நாம் மறக்கக் கூடாது. நாட்டு மக்களையும் மறக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு, மத்தியில் ஆட்சியிலிருந்த அரசுகள், விவசாயிகளை வாக்காளர்களாகவே பார்த்தன.
 ஆனால் எனது அரசோ, அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக அதிகரிக்கச் செய்ய, இரவு - பகல் பாராமல் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. விவசாயிகளும், விவசாயத் துறையும் தற்போது மோசமான நிலையில் இருப்பதற்கு, முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள், பல ஆண்டுகளாக விவசாயத்தை புறக்கணித்ததுதான் காரணம். குறுக்குவழிகள் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். விவசாயிகளை வெறும் வாக்குவங்கியாக அவர்கள் பார்த்தனர். ஆனால் மத்திய அரசோ, புதிய இந்தியாவை சுமக்கும் புதிய சக்தியாக விவசாயிகளை உருவாக்க விரும்புகிறது என்றார் மோடி.
 கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 10% இடங்கள்
 கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 10 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், "சமூக நீதி மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற தாரக மந்திரத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆதலால் கல்வி நிறுவனங்களில், பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 10 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்கப்படும்' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com