உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் சனிக்கிழமை வெளியிட்டனர். இக்கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. சிறிய கட்சிகளுக்கு இரு இடங்களை ஒதுக்கியுள்ளன. 

எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வருகிற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். இதற்காக நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று இம்முறையும் நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மேலும் அந்த எண்ணிக்கையை விட இரட்டிப்பு மடங்கு இடங்களைக் கைப்பற்றுவோம்.

இந்தக் கூட்டணியை நாங்கள் உடைக்கவில்லை என்பதை மக்களும் நன்கு அறிவார்கள். பாஜக-வை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், இதில் நாங்கள் யாரையும் நிர்பந்திக்க முடியாது. 

இந்த அத்தியாயத்தை முடித்து வைத்தது சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தான். எனவே நாங்கள் பாஜக-வை வீழ்த்தும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து தனித்து செயல்படுத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com