உ.பி. யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? இன்று ஆலோசனைக் கூட்டம்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் இடம் அளிக்கப்படாததை அடுத்து, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உ.பி. யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? இன்று ஆலோசனைக் கூட்டம்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் இடம் அளிக்கப்படாததை அடுத்து, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது உள்ளிட்ட விவகாரங்களை கலந்தாலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றனர்.
 சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.
 இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத் தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்தோ, அதில் காங்கிரஸ் சேர்க்கப்படாதது குறித்தோ உடனடியாக கருத்து கூற இயலாது.
 லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக தெரிவிக்கப்படும். அதற்கு முன்பாக தெரிவிக்கப்படும் கருத்துகள், அவரவர் தனிப்பட்ட கருத்துகளாகும்.
 மத்திய மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேச பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசிக்க உள்ளோம். மக்களவைத் தேர்தலுக்காக மாவட்ட அளவிலான தயார் நிலை குறித்து அப்போது ஆராயப்படும். ஏற்கெனவே, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் கடந்த இரு நாள்களாக கலந்தாலோசிக்கப்பட்டது என்று குலாம் நபி ஆஸாத் கூறினார்.
 முன்னதாக, உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், காங்கிரஸ் பேரவை கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், முன்னாள் எம்.பி. பிரமோத் திவாரி ஆகியோரை குலாம் நபி ஆஸாத் தனது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார்.
 லக்னெள ஆலோசனைக் கூட்டம் குறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி கூறுகையில், "மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் தொடர்பாக கலந்தாலோசிக்க குலாம் நபி ஆஸாத், கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை கூடுகின்றனர். இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய கமிட்டியில் உள்ள உத்தரப் பிரதேசத் தலைவர்கள் அனைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்களும் பங்கேற்கின்றனர்' என்றார்.
 தனித்துப் போட்டி?: சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியானது, பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றுதிரட்டும் காங்கிரஸின் முயற்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் உள்வட்டாரங்களே கருதுகின்றன.
 எனினும், இச்சூழலில் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெல்லக் கூடும் என்று கட்சியின் வேறு சில பிரிவினர் நம்புகின்றனர்.
 இது, கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த உதவும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர காங்கிரஸுக்கு வேறு வழியே இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com