பயங்கரவாத தாக்குதல் சதி: உ.பி.யில் மேலும் ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதில் கைது செய்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதில் கைது செய்துள்ளது.
 தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்யவும் திட்டம் தீட்டியிருந்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 பேரை என்ஐஏ ஏற்கெனவே கைது செய்திருந்தது. தற்போது அந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
 காஜியாபாதின் ஹபூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அப்சர் (24) என்ற நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து ஹபூர், மீரட், காஜியாபாத் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட அப்சர் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க பெருநகர குற்றவியல் நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 மீரட் மாவட்டம் ஜசோரா பகுதியில் வசித்து வரும் அப்சர், காஜியாபாத் மாவட்டம் பிப்லேரா பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தாக்குதல் சதித் திட்டம் தொடர்பாக அவரும், ஏற்கெனவே கைது செய்யப்பட இஃப்தெகார் சாகிபும் கடந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 3 இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
 ஐஎஸ் அமைப்பைப் போன்று உருவாக்கப்பட்ட, "ஹர்கத்துல் ஹர்ப் இ இஸ்லாம்' (இஸ்லாம் மதத்துக்காக போர்) என்ற அமைப்பில் அப்சரும் அங்கம் வகித்துள்ளார் என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 முன்னதாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் ஏற்கெனவே கைது செய்திருந்த 10 பேரும் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டனர். அவர்களில் ஒருவர் பொறியியல் மாணவர். இன்னொருவர் 3ஆம் ஆண்டு கல்லூரி மாணவர். 2 பேர் வெல்டிங் தொழிலாளிகள்.
 அப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நாட்டு தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், தற்கொலைத் தாக்குதல் நடத்த பயன்படும் ஆடைக்கான பொருள்கள், 12 கைத் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள், 91 செல்லிடப் பேசிகள், 134 சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ரூ.7.5 லட்சம் ரொக்கம், வெடிகுண்டுகளை இயக்க பயன்படும் 112 அலாரம் கடிகாரங்கள், வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட், சல்பர் உள்ளிட்டவையும் 25 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com