மேக்கேதாட்டு: நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி; மத்திய அரசு

மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு நிபந்தனையின்அடிப்படையில் பூர்வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக
மேக்கேதாட்டு: நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி; மத்திய அரசு

மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு நிபந்தனையின்அடிப்படையில் பூர்வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இது தொடர்பாக வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கோரியுள்ளது.
 மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியும், புதுச்சேரி அரசு டிசம்பர் 8-ஆம் தேதியும் மனுக்களைத் தாக்கல் செய்தன. மேலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தொடுத்தது. தமிழகம், புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்களில், மேக்கேதாட்டு அணை, குடிநீர்த் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தன.
 இந்நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 இதில், கர்நாடக அரசு சார்பில் கடந்த 4-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் மனு சட்டப்படி எந்தவித முகாந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க நிபந்தனையின் அடிப்படையில் பூர்வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையற்றவை. எனவே, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யலாம்; அபராதம் விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com