மோடி அரசின் சாதனைகளைக் கூறி பிரசாரம் செய்யுங்கள்: பாஜக தொண்டர்களுக்கு ஜேட்லி அறிவுறுத்தல்

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஈடு இணையற்ற தலைமைப் பண்பையும், அவரது தலைமையிலான அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று
மோடி அரசின் சாதனைகளைக் கூறி பிரசாரம் செய்யுங்கள்: பாஜக தொண்டர்களுக்கு ஜேட்லி அறிவுறுத்தல்

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஈடு இணையற்ற தலைமைப் பண்பையும், அவரது தலைமையிலான அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்களை பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
 பாஜகவின் தேசிய அளவிலான மாநாடு, தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு அருண் ஜேட்லி பேசியதாவது:
 இன்னும் 5 மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரை, பாஜக நிர்வாகிகள் எங்கு உரையாற்றினாலும், மக்கள் மத்தியில் பேசினாலும், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டும்.
 வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடியின் தலைமை, பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. அவரது தலைமைப் பண்புக்கு முன்னால் யாராலும் நிற்க முடியாது. அவரது தலைமைப் பண்பைப் பற்றி விவாதித்தால், யாராலும் வெற்றி பெற முடியாது. அந்த விவாதத்தில் பங்கேற்கும் பாஜக நிர்வாகிகள், மோடி அரசின் சாதனைகளை மட்டுமே பேசினால் போதும்; வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விடும். ஆனால், அந்த விவாதத்தில் பங்கேற்கும் எதிர்க்கட்யினர் விவாதத்தை திசை திருப்புவார்கள்.
 பிரதமர் மோடிக்குப் பிறகு இந்த நாட்டை வழிநடத்தப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் அடுத்த பிரதமராக வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் இளவரசராக (ராகுல் காந்தி) இருக்கலாம், மேற்கு வங்கத்தின் தீதியாக (மம்தா பானர்ஜி) இருக்கலாம், ஆந்திரப் பிரதேசத்தின் பாபுவாக (சந்திரபாபு நாயுடு) இருக்கலாம் அல்லது உத்தரப் பிரதேசத்தின் பேகன்ஜியாக (மாயாவதி) இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவர்களின் பலம் என்னவென்று தெரிந்துவிடும்.
 பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள முயலுகின்றன. இதுபோன்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியடைந்து விட்டன. இந்தக் கூட்டணியில் இடம்பெறும் தலைவர்களின் கொள்கைகளும், சித்தாந்தங்களும் வெவ்வேறாக உள்ளன. எனவே, அவர்களுக்குள்ளாகவே கருத்து மோதல்கள் ஏற்படும். இறுதியில் அந்தக் கூட்டணி சிதறிவிடும்.
 கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எண்ணற்ற சாதனைகளை நிறைவேற்றியுள்ளது. கட்சித் தொண்டர்கள் அவமானப்படும் விதமாக, எந்தவொரு சிறு தவறையும் இந்த அரசு செய்ததில்லை என்றார் ஜேட்லி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com