இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: ரூ.21,000 கோடியில் அமைக்க மத்திய அரசு திட்டம்

போர்க் காலங்களில் இந்தியப் படைகள் விரைந்து முன்னேறுவதற்கு வசதியாக, இந்திய-சீன எல்லைப் பகுதியில் ரூ.21,000 கோடி செலவில் 44 சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: ரூ.21,000 கோடியில் அமைக்க மத்திய அரசு திட்டம்

போர்க் காலங்களில் இந்தியப் படைகள் விரைந்து முன்னேறுவதற்கு வசதியாக, இந்திய-சீன எல்லைப் பகுதியில் ரூ.21,000 கோடி செலவில் 44 சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 இதேபோல், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ரூ.5,400 கோடி செலவில் சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. மற்றொரு புறம், சீன அரசு, இந்திய எல்லையோரப் பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
 இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு, வடமேற்கு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சாலை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 இதுதொடர்பாக, மத்திய பொதுப் பணித் துறை தயாரித்துள்ள திட்ட அறிக்கை, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 இந்தியா-சீனா இடையேயான எல்லை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடங்கி அருணாசலப் பிரதேசம் வரை சுமார் 4,000 கி.மீ. நீளம் கொண்டது. இந்த எல்லையை ஒட்டிய பகுதிகளில் ரூ.21,000 கோடி செலவில் 44 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. அந்தச் சாலைகள், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன.
 இந்த திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டுமெனில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். எனவே, அந்த ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 இதேபோல், இந்திய-பாகிஸ்தான் இடையேயான எல்லை, ஜம்மு-காஷ்மீரில் தொடங்கி குஜராத் வரை 2,100 கி.மீ. தொலைவு கொண்டது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ரூ.5,400 கோடி செலவில் சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அமைக்கப்படும் சாலைகளால் அங்குள்ள எல்லைப் பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கும். மேலும் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதால், போர்க்காலங்களில் இந்தியப் படைகள் விரைந்து முன்னேறிச் செல்லும் என்று அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் டோக்கா லாம் என்ற இடத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டில் சீன ராணுவம் அத்துமீறி சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டதால் போர்ப் பதற்றம் உருவானது. பிறகு சாலை அமைக்கும் பணியைக் கைவிடுவதாக சீனா அறிவித்ததை அடுத்து, இந்திய ராணுவம் தனது படையை விலக்கிக் கொண்டது. சுமார் 72 நாள்கள் நீடித்த பதற்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com