உ.பி.யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு

வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
உ.பி.யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு

வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அங்குள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் களமிறங்குகிறது. இதனை அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
 முன்னதாக, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக சனிக்கிழமை அறிவித்தன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
 நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரûஸ ஒதுக்கிவிட்டு கூட்டணி அமைத்தது, காங்கிரஸுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
 எனினும், ராகுல் காந்தியின் அமேதி, சோனியா காந்தியின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால், இக்கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
 ஆலோசனைக் கூட்டம்: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் கூட்டணி இல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
 "அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்': கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஆஸாத் கூறியதாவது:
 வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை நிச்சயமாக தோற்கடிப்போம். கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல இந்த முறையும் நிச்சயமாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்.
 மாநிலத்தில் வேறு கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முன்வந்தால், பாஜகவைத் தோற்கடிக்க அவர்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்பதை பரிசீலித்து அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.
 பாஜகவுக்கு எதிராக அமையும் மகா கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், சிலர் தனித்துக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினால், அதில் நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்றார் அவர்.
 தேர்தலுக்குப் பிறகு கூட்டணி: தேர்தலுக்குப் பிறகு சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "தேசிய அளவில் மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராகவே இருக்கிறோம்' என்று பதிலளித்தார்.
 தொண்டர்களுக்கு ஏமாற்றமில்லை: சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் கிடைக்காதது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏமாற்றம்தானே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆஸாத், "நிச்சயமாக காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடையவில்லை.
 உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைந்தால் 25 தொகுதிகள் வரையே காங்கிரஸ் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம்.
 இதன் மூலம் தொண்டர்கள் உற்சாகமாகப் பணியாற்றுவார்கள்' என்றார்.
 அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? என்று கேட்கப்பட்டபோது, "இந்த விஷயத்தில் ஊடகங்களின் ஊகங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது' என்றார் ஆஸாத்.
 இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
 கடந்த தேர்தலில்...: கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே வெற்றி பெற்றனர்.
 காங்கிரஸுக்கு 7.5 சதவீத வாக்குகளே கிடைத்தன.
 அதே நேரத்தில், பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 24.80 சதவீத வாக்குகளையும் பெற்றது. சமாஜவாதி கட்சிக்கு 5 தொகுதிகள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com